இந்த வலைப் பூவில் உங்கள் ஊரில் உள்ள ஆலயங்கள் பற்றிய தகவல்களை உங்கள் பெயரிலேயே வெளியிட ஆலய புகைப்படத்துடன் விபரங்களை அனுப்பலாம் aalayankal@gmail.com

Monday, June 6, 2011

சுக்கிர தோஷம் நீங்க கோலவில்லி ராமரை தரிசியுங்கள்!

ன்னிரு ஆழ்வார்களால் போற்றிப் பாடப் பெற்ற 108 திவ்ய தேசத் திருத்தலங்களுள் ஒன்றான திருவெள்ளியங்குடிக்கு, விசேஷ பெருமை உண்டு. அதாவது, இந்த திவ்ய தேசத் திருத்தலம் ஒன்றைத் தரிசித்தாலே போதுமாம்... 108 திருத்தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்குமாம்.


திருவெள்ளியங்குடி பெருமாளது புகழும் விசேஷமும் பத்துப் பாசுரங்களில் திருமங்கை ஆழ்வாரால் பாடப் பெற்றுள்ளது. திருஇந்தளூரில் (மயிலாடுதுறை) பெருமாளின் சேவை தனக்குக் கிடைக்கத் தாமதம் ஆனதால், மனம் நொந்தார் திருமங்கை ஆழ்வார். இவரை சாந்தப்படுத்தும் விதமாக திருவெள்ளியங்குடி பெருமாளான க்ஷீராப்திநாதரே, தன் தலத்துக்குத் திருமங்கை ஆழ்வாரை அழைத்துத் தரிசனம் தந்ததாகக் கூறுவர். க்ஷீராப்திநாதரே இங்கு மூலவர் என்றா லும், 'ஸ்ரீகோலவில்லி ராமர்' என்கிற திருநாமமே மங்களாசாசனப் பெயர். எனவே, மூலவரையும் கோலவில்லி ராமர் என்றே அழைப்பது வழக்கத்தில் இருக்கிறது.

திருவெள்ளியங்குடி எனும் இந்தத் திருத்தலம் நான்கு யுகங்களிலும் புகழ் பெற்று இருந்துள்ளது. கிருத யுகத்தில்- பிரம்ம புத்திரம் என்றும், திரேதா யுகத்தில்- பராசரம் என்றும், துவாபர யுகத்தில்- சைந்திர நகரம் என்றும், கலியுகத்தில்- பார்க்கவபுரம் என்றும் திருவெள்ளியங்குடி போற்றப்படுகிறது.

சுக்கிரன் (இதனால் இது வைணவ சுக்கிரத் தலம் எனப்படுகிறது), பிரம்மன், பராசரர், இந்திரன், பிருகு முனிவர், அசுர சிற்பியான மயன், மார்க்கண்டேய மகரிஷி, பூமாதேவி முதலானோருக்கு பெருமாள் இங்கே காட்சி தந்து அருளி உள்ளார்.


பிரம்மன்,சிவபெருமான்மற்றும்இந்திரன்முதலானதேவாதிதேவர்கள் திரளாகத் திரண்டு வந்து, இந்தஎம்பெருமானின் கல்யாண குணங்களில் ஈடுபட்டுப் போற்றிக் கொண்டாடும் தலம் இது. எனவே, மாங்கல்ய பிராப்தம் அமைய விரும்புவோர், திருமணம் தடைபடுவோர் இங்கு வந்து பிரார்த்தித்து உரிய வழிபாடுகளைச் செய்தால், பலன் உண்டு. சுக்கிரனுக்குக் கண்பார்வை அருளிய தலம் என்பதால், கண் சம்பந்தமான குறைபாடு உள்ளோரும் இங்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள்.


தல விருட்சமாக செவ்வாழையை (கதலி) கொண்ட தலம். ஆலயத்தின் பிராகாரத்தில் கருங்கல் தரையில் முளைத்துள்ள செவ்வாழை மரங்கள், பச்சைப் பசேலென்று கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சி தருகின்றன!


இப்படிப் பல சிறப்புகள் கொண்டு, தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் விளங்கும் திருவெள்ளியங்குடி ஸ்ரீகோலவில்லி ராமர் ஆலயத்தை தரிசிப்போம், வாருங்கள்!


எங்கே இருக்கிறது திருவெள்ளியங்குடி?


கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையில், சோழபுரத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு பயணித் தால் திருவெள்ளியங்குடி. சோழபுரத்தை அடுத்து வரும் திருப்பனந்தாளில் இறங்கினா லும் திருவெள்ளியங்குடிக்கு இதே 6 கி.மீ. தொலைவுதான். சோழபுரம் மற்றும் திருப்பனந்தாளில் இருந்து ஆட்டோ மற்றும் வாடகை கார் வசதிகள் இருக்கின்றன.


கும்பகோணம்- ஆடுதுறை சாலையில் பயணித்தால், முட்டக்குடி என்கிற கிராமத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும்.


திருப்பனந்தாள்- ஆடுதுறை சாலையில் மையமாக திருவெள்ளியங்குடி இருக்கிறது. ஆடு துறையில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது முட்டக்குடி. இங்கிருந்து ஆலயத்துக்கு சுமார் 3 கி.மீ. தொலைவு.


திருவெள்ளியங்குடிக்கு நேரடிப் பேருந்து வசதி அவ்வளவாக இல்லை. கும்பகோணத்தில் இருந்து புறப்படும் 2-ஆம் எண்ணுள்ள நகரப் பேருந்து, தினமும் ஒரு சில டிரிப் மட்டுமே (அணக்குடி வழியாக) திருவெள்ளியங்குடி செல்லும். மற்ற நேரங்களில் கும்பகோணத்தில் இருந்து திருப்பனந் தாள் வரை செல்லும்.


புராதனமான ஆலயம் ஒன்றை தரிசிக்கச் செல்லலாம் என்றால், அங்கு செல் வதற்கு உண்டான வழித் தடத்தில் இவ்வளவு குழப்பமா என்று யோசிக்கிறீர்களா? என்ன செய்வது? கஷ்டப்பட்டால்தான் நல்லதைப் பெற முடியும். முறையான வழித் தடம் அமையாத ஆயிரக்கணக்கான புராதன ஆலயங்கள் நம் தமிழக கிராமங்களில் எவரது கண்களுக்கும் படாமல் இருக்கத்தான் செய்கின்றன. இது போன்ற ஆலயங்கள் பற்றிய தகவல்களை அறிய நேரிடும்போது, 'போக்குவரத்து வசதி சரியாக இல்லையே' என்றெல்லாம் குறைபட்டுக் கொள்ளாமல், ஒரு சில சிரமங்களை எதிர்கொண்டாவது பயணித்து, இதுபோன்ற ஆலயங்களைத் தரிசிக்க வேண்டும். அப்படிப்பட்ட தரிசனத்தில் இருக்கும் சுகமே அலாதி! அனுபவப் பட்டவர்களுக்கு இதன் அருமை புரியும்.


இனி, திருமங்கை ஆழ்வார் திருவெள்ளியங்குடி திருத்தலத்துக்கு வந்த கதையைப் பார்ப்போம். ஒவ்வொரு தலமாகத் தரிசித்தபடி சோழ நாட்டில் பயணித்துக் கொண்டிருந்தார் திருமங்கை ஆழ்வார். திருவெள்ளியங்குடி திருத்தலத்துக்கு வந்தவர், மூலவர் க்ஷீராப்திநாதர் திருமேனியின் அழகில் சொக்கிப் போனார். திருஇந்தளூரில்

பெருமாளின் தரிசனம் தனக்குக் கிடைக்காததால் மனம் வருந்தி பயணித்துக் கொண்டிருந்த ஆழ்வாரை, இந்த ஊர் பெருமாள் வலிய அழைத்து அவருக்குத் தரிசனம் தந்தாராம். எனவே, அதுவரை க்ஷீராப்திநாதன் என்று அழைக்கப்பட்டு வந்த மூலவரை, 'கோலவில்லி ராமர்' என்று செல்லமாக அழைக்க ஆரம்பித்தார் திருமங்கை ஆழ்வார். தான் அழைத்த பெயரையே தனது பாசுரங்களிலும் வெளிப்படுத்தினார்.காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை யுறக்
கடலரக்கர்தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த
கோலவில் இராமன்றன் கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து
வீழ்ந்தன உண்டு மண்டி
சேற்றிடைக் கயல்களுகள் திகழ் வயல்சூழ்
திருவெள்ளியங்குடி யதுவே.

என்கிறார் திருமங்கை ஆழ் வார் (பெரிய திருமொழி).


பொருள்: வீசுகின்ற பெரும் காற்றிலே இலவம் பஞ்சானது தன் அடையாளத்தை எங்கேயோ தொலைத்து அழிந்து போய் விடுகிறது.

அதுபோல், அரக்கர் களுடைய கடல் போன்ற பெரும் படைகள் தோல்வியுற்று, அல்லலுற்று மெள்ள மெள்ள எமலோகம் சென்று சேர்கின்றன. இது எப்படி நிகழ்கிறது? தன்னிடம் உள்ள அழகிய வில்லில் - கொடிய அம்புகளைத் தொடுத்து இந்த அரக்கர் படைகளை அழித்தாராம் ஸ்ரீராமபிரான். இத்தகைய ஸ்ரீகோல வில்லிராமர் (அழகிய வில்லை உடைய ராமர் என்பது பொருள்) திருக்கோயில் கொண்டுள்ள இடம் திருவெள்ளியங்குடி ஆகும் என்று இந்த பாசுரத்துக்கு அழகாக விளக்கம் தருகிறார் ஆழ்வார். இந்த ஆலயத்தின் தல விருட்சமான செவ்வாழைபற்றியும் தன் பாடலில் சொல்லி இருக்கிறார்.

ஆழ்வாரின் சிறப்பைப் பார்த்தோம். இனி, இந்தக் கோலவில்லி ராமரை, அசுர குல சிற்பியான மயன் போற்றி வணங்கிய கதையைப் பார்ப்போமா?

புராண காலத்தில் தேவர்கள், அசுரர்கள் என்று இரு பிரிவினர் இருந்தனர். தேவர்களின் சிற்பியாக விஸ்வகர்மாவும், அசுரர்களின் சிற்பியாக மயனும் இருந்து வந்தனர். தேவர்களுக்கான மாளிகைகளைக் கட்டிக் கொடுத்து நற்பெயர் பெற்றார் விஸ்வகர்மா.


அதோடு, ஸ்ரீமந் நாராயணன் உறையும் திருக் கோயில்களை - அவரது பரிபூரண அருள் பெற்று, நிர்மாணிக்கும் பேறு பெற்றார் விஸ்வகர்மா.


தேவ சிற்பியான விஸ்வகர்மாவுக்கு இப்படியரு வாய்ப்பு கிடைத்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால், இதே ஆசை அசுர குல சிற்பியான மயனுக்கும் வந்தது. அதாவது, சர்வ வியாபியான ஸ்ரீநாராயணனின் அருள் பெற்று, அழகிய விமானத்துடன் கூடிய திருக்கோயில் ஒன்றை அந்தப் பரந்தாமனுக்குக் கட்ட விரும்பினான். விஸ்வகர்மா வுக்குக் கிடைத்த பேரும் புகழும் தனக்கும் கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டான் மயன்.


'இது சாத்தியமா? என்னால் முடியுமா?' என்று மனதுக்குள் குழப்பம் கொண்ட மயன், பிரம்ம தேவனை அணுகி, தன் விருப்பத்தைத் தெரிவித்தான். பிரம்மதேவர்

ஆச்சரியம் அடைந்தார். 'அசுர குல சிற்பிக்கு, இப்படியும் ஒரு ஆசையா? எல்லாம் அந்த நாராயணனின் விளையாட்டுதான் போலும்!' என்று மெள்ள புன்னகைத்தவர், ''ஓர் உபாயம் இருக்கிறது. உன்னால் அதைச் செய்ய முடியும். விஸ்வ
கர்மாவானவர் பல திருக்கோயில்களை அமைத்தது, பூர்வ ஜென்மத்தில் அவர் செய்த புண்ணியத்தின் பலன்தான். உனக்கும் அப்படி ஒரு பேறு வாய்க்க லாம். அதற்குச் சிறந்த வழி- தவம். புண்ணிய நதியான காவிரியின் கரையில் உனக்குப் பிடித்தமான ஓர் இடத்தில் அமர்ந்து, ஸ்ரீமந் நாராயணனை நினைத்துக் கடுமையாக தவம் இரு. இதற்கு உரிய பலன் நிச்சயம் கிடைக்கும். போய் வா'' என்று மயனுக்கு ஆசி வழங்கி அனுப்பினார்.


பிரம்மனின் சொல்படி, பூலோகம் வந்து காவிரிக் கரையோரமாக பயணித்து தவம் இருப்பதற்குத் தகுந்த இடம் தேடினான் மயன். இப்போது திருவெள்ளியங்குடி என்று அழைக்கப்படும் இந்த திருத்தலத்துக்கு வந்தான். இங்கு மார்க்கண்டேய மகரிஷி தவம் இருப்பதைக் கண்டு, தான் தவம் இருப்பதற்கும் எம்பெருமானைத்

துதிப்பதற்கும் இதுவே உகந்த தலம் என்று கருதி, தவத்தைத் தொடங்கினான்.


ஸ்ரீமந் நாராயணனும் மயனின் தவத்துக்கு இரங்கி அவனுக்குக் காட்சி கொடுத்தார். எப்படி தெரியுமா?


ஸ்ரீமந் நாராயணன் தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் முதலான ஆயுதங்களைத் தரித்துத் திருமாலாக மயனுக்குக் காட்சி கொடுத்தார். ஆனால், இரண்டே திருக்கரங்கள் கொண்டு- அவற்றில் வில்லும் அம்பும் தரித்துக் கோலவில்லி ராமனாக தனக்குக் காட்சி தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தான் மயன். பக்தனது வேண்டு கோளுக்கு இணங்கி, தன் மேற்கரங்களில் இருந்த சங்கு- சக்கரம் ஆகிய ஆயுதங்களை அருகில் இருந்த கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு, மயன் விரும்பிய கோலத்திலேயே அவனுக்குக் காட்சி தந்தாராம் பெருமாள். இதில் பெரிதும் மகிழ்ந்த மயன் - அழகிய மதில்கள், சுற்றுப் பிராகாரங்கள், மண்டபங்கள், விமானங்கள் என்று இந்த ஆலயத்தை அழகுற அமைத்ததாகத் தல புராணம் கூறுகிறது.


மயனுக்குக் கோலவில்லி ராமனாகக் காட்சி தருவதற்காகத் தன் கைகளில் இருந்த சங்கு மற்றும் சக்கரத்தைக் கருடாழ்வாரிடம் கொடுத்தார் அல்லவா? அப்போது கருடாழ்வார் அதை எப்படிப் பெற்றுக் கொண்டார் தெரியுமா? அமர்ந்த நிலையி லும் இல்லாமல், நின்ற நிலையிலும் இல்லாமல் எழுகின்ற நிலையில், பெருமாளிடம் இருந்து இந்த ஆயுதங்களை பெற்றுக் கொண்டாராம்!


எனவே, திருவெள்ளியங்குடியில் மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரே அருள் பாலிக்கும் கருடாழ்வாருக்கு நான்கு திருக்கரங்கள். ''இப்படியரு கோலத்தில் அருள் பாலிக்கும் கருடாழ்வாரை வேறு எங்கும் தரிசிப்பது அபூர்வம். இந்த கருடாழ்வாரை வழிபடு வோர்க்கு சகல நலன்களும் கிடைக்கும். வாகனங் களில் செல்பவர்கள் இவரை வேண்டி வழிபட்டால், விபத்துகள் ஏதும் நிகழாது'' என்கிறார் ஆலய பட்டாச்சார்யர்.


அசுர குல சிற்பிக்கு மட்டுமல்ல... அசுர குல குருவுக்கும் இந்த கோலவில்லி ராமர் அருள் பாலித்திருக்கிறார்!


இந்தத் தலம், ஸ்ரீமந் நாராயணனின் தசாவதாரங் களில் ஒன்றான வாமன அவதாரத்துடனும் தொடர்பு உடையது. மஹாபலியின் செருக்கை அடக்க வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள், அவனிடம் மூன்றடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். மகா பலிக்குக் குருவாக இருந்தவர் சுக்கிராச்சார்யர். அசுர குலத்துக்கே இவர்தான் குரு. 'வந்திருப்பவன் சாதாரணமானவன் அல்ல... ஸ்ரீமந் நாராயணனே' என்பதை அறிந்த சுக்கிராச்சார்யர், வாமனன் கேட்டபடி மூன்றடி நிலத்தை மகாபலி தாரை வார்த்துக் கொடுக்கக் கூடாது என்று விரும்பினார். திருமாலின் அவதார நிகழ்வையும், தானம் கொடுத்த பின் மகாபலியின் நிலையையும் சுக்கிராச்சார்யர் நன்றாகவே அறிவார். இருந்தாலும், தாரை வார்த் துக் கொடுப்பது என்கிற தன் முடிவில் இருந்து பின்வாங்க மறுத்தான் மகாபலி சக்ரவர்த்தி.


மகாபலி தானம் கொடுப்பதைத் தடுக்க நினைத்த சுக்கிராச்சார்யர், ஒரு முடிவுக்கு வந்தார். மகாபலி யின் கமண்டலத்தில் இருந்து நீர் வரும் வழியை, ஒரு வண்டு உருவில் வந்து அடைத்துக் கொண் டார் சுக்கிராச்சார்யர். எனவே, மகாபலி யின் கமண்டலத்தில் இருந்து நீர், வாமனன் கையில் வந்து விழவில்லை. வாமனன், சாமான்யனா? ஒரு தர்ப்பைப் புல்லால் கமண்டலத்தின் துளையில் சரேலென்று குத்தினார். அந்தத் தர்ப்பைப் புல், வண் டின் ஒரு கண்ணை ஏகத்துக்கும் பாதிக்கச் செய்து விட்டது.


தனது தகாத செயலால் இப்படி ஆகி விட்டதே என்று வருந் திய சுக்கிராச்சார்யர், இழந்த பார்வையை மீண்டும் பெற இந்தத் தலத்துக்கு வந்து வண்டு வடிவில் ஒரு மண்டல காலம் தவம் இருந்தார். இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடினார். அப்போது, தான் சேகரித்து வைத்திருந்த தேன் துளிகளை எல்லாம், இந்தத் தீர்த்தத்தில் கலந்தாராம். அவரது தவத்துக்கு இரங்கிய எம்பெருமான், உளம் கனிந்து அவருக்குக் காட்சி தந்து பார்வையையும் கொடுத்து அருளினார். அன்று சுக்கிரனுக்குக் கொடுக்கப்பட்ட ஒளி, இப்போதும் தூண்டா விளக்காக (நேத்திர தீபம்) கருவறை அருகே, இரவும் பகலும் சுடர் விட்டுப் பிராகாசிக்கிறது. சுக்கிர பகவானுக்குப் பெருமாள் தந்த ஒளி, இன்றும் இந்த தீபத்தில் உயிர்ப்புடன் இருப்பதாக நம்பப்படுகிறது.


சுக்கிர பகவான் வணங்கியதால், இது சுக்கிரபுரி ஆயிற்று. சுக்கிரனுக்குத் தமிழில் வெள்ளி என்று பெயர். எனவே, இந்தத் திருத்தலம், 'திருவெள்ளியங் குடி'. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வைணவ நவக் கிரகத் தலங்களில், இது சுக்கிரனுக்கான திருக் கோயில் (இதர தலங்கள்: சூரியன்- சாரங்கபாணி திருக்கோயில், குடந்தை; சந்திரன்- ஸ்ரீநாதன் கோயில், நந்திபுர விண்ணகரம்; அங்காரகன்- திருநறையூர், நாச்சியார்கோவில்; புதன்- திருப்புள்ள பூதங்குடி; குரு- திருஆதனூர்; சனி- திருவிண்ணகர், ஒப்பிலியப்பன்கோயில்; ராகு- கபிஸ்தலம்; கேது- திருக்கூடலூர், ஆடு துறை பெருமாள்கோயில்). சுக்கிர தோஷம் உள்ளவர்களும், சுக்கிரனின் அருள் வேண்டு பவர்களும் இங்கு வந்து தரிசித்துச் சென்றால் நற்பலன்கள் விளையும்.


பார்க்கவ முனிவர் இந்தத் தலத்தில் நீண்ட காலம் தவம் இருந்ததால் பார்கவபுரி என்றும், தான் இழந்த சிருஷ்டி பதவியை இந்தத் தலத்தில் தவம் இருந்து மீண்டும் பிரம்மன் பெற்றதால் பிரம்மபுரி என்றும் அழைக்கப்படுவதுண்டு.


ஆலயத்துக்கான தீர்த்தங்கள் நான்கு. இந்திர தீர்த்தம், ஆலயத்தின் எதிரே

இருக்கிறது. பிரம்ம தீர்த்தம், ஆலயத்துக்கு மேற்கே இருக்கிறது. சுக்கிர தீர்த்தக் கிணறு ஆலயத்துக்கு வடக்கிலும், பராசர தீர்த்தக் கிணறு ஆலயத்துக்குத் தென் திசையிலும் விளங்குகின்றன.

இனி, ஆலய தரிசனம்.


கடந்த 2001-ல் மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றுள்ளது. கிழக்கு நோக்கிய பிரமாண்ட திருக்கோயில். மூன்று நிலை ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும், பலிபீடம்; கொடிமரம். கருடாழ்வார் சந்நிதி. சங்கு- சக்கரத்துடன் அருள் பாலிக்கும் அற்புதமான திருமேனி. இடக் காலை மடித்து, வலக் காலைக் குத்திட்டு அமர்ந்திருக்கும் வடிவம்.


இரண்டாம் பிராகாரத்தில் மரகதவல்லித் தாயார் மற்றும் ஆண்டாளின் சந்நிதிகள். மரகதவல்லித் தாயாரின் சந்நிதி விஸ்தார மானது. நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கும் பச்சைக்கல் வடிவம். அமர்ந்த நிலை. தவிர யோக நரசிம்மர், வரதராஜ பெருமாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், குலசேகர ஆழ்வார், ராமானுஜர், தேசிகர், விஷ்வக்சேனர் என்று பல மூலவர் மூர்த்தங்களைத் தரிசிக்கலாம் (ஆலயத்துக்கு வெளியே ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார்).


மூலவர் க்ஷீராப்திநாதரைத் தரிசிக்கச் செல்கிறோம். அத்தி மரத்தால் ஆன ஜய- விஜயரான துவாரபாலகர்களை வணங்கி உள்ளே செல்கிறோம். புஜங்க சயனத்தில் பெருமாளின் பிரமாண்டத் திருமேனி. சிலா விக்கிரத்தின் மேல் வர்ண கலாபம் பூசப்பட்டுள்ளது, அழகான திருக்கோலம். க்ஷீராப்திநாதரின் தலைமாட்டில் ஸ்ரீமார்க் கண்டேய மகரிஷியும், கால்மாட்டில் பூதேவியும் தரிசனம் தருகிறார்கள். இந்தப் பெருமாளைத்தான் 'கோலவில்லி ராமர்'

என்கிற பெயரில் மங்களாசாசனம் செய்தார் திருமங்கை ஆழ்வார். உற்சவர் கோலவில்லி ராமர் என்றும் சிருங்காரசுந்தரர் என்றும் அழைக்கப்படுகிறார்.


அநேக உற்ஸவங்கள் பிரமாதமாகவே நடந்து வருகின்றன. க்ஷீராப்திநாதரின் அருள்பெற்ற அன்பர்களின் உதவி கொண்டு, ஆலயம் சிறப்பாகவே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


பிரார்த்தனை முடிந்து ஆலயத்தில் இருந்து வெளியே திரும்பும்போது, நிறை வான தரிசனம் முடித்த திருப்தி எவருக்கும் நிச்சயம் இருக்கும்.


தலம்: திருவெள்ளியங்குடி

மூலவர்: க்ஷீராப்திநாதர்,
உற்ஸவர்: சிருங்கார சுந்தரர் கோலவில்லி ராமர்.
தாயார்: மரகதவல்லி தாயார்.


எங்கே இருக்கிறது?: கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையில் சோழபுரத்தில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து 6 கி.மீ. தொலைவு திருவெள்ளியங்குடி. சோழபுரத்தை அடுத்து வரும் திருப்பனந்தாளில் இறங்கிக் கொண்டாலும் இதே 6 கி.மீ. தொலைவுதான் திருவெள்ளியங்குடி.


கும்பகோணம்- ஆடுதுறை சாலையில் பயணித்தால், முட்டக்குடி என்கிற கிராமத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும்.


திருப்பனந்தாள்- ஆடுதுறை சாலையில் மையமாக திருவெள் ளியங்குடி இருக்கிறது. ஆடுதுறையில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது முட்டக்குடி. இங்கிருந்து ஆலயத்துக்கு சுமார் 3 கி.மீ.!


எப்படிப் போவது?: திருவெள்ளியங்குடிக்கு நேரடிப் பேருந்து வசதி அவ்வளவாக இல்லை. கும்பகோணத்தில் இருந்து புறப்படும் 2-ஆம் எண்ணுள்ள நகரப் பேருந்து தினமும் ஒரு சில டிரிப் மட்டுமே (அணக்குடி வழியாக) திருவெள்ளியங்குடி செல்லும். மற்ற நேரங்களில் கும்பகோணத்தில் இருந்து திருப்பனந்தாள் வரை செல்லும்.


மற்றபடி கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் பேருந்துகளில் பயணித்து, சோழபுரம் மற்றும் திருப்பனந்தாளில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் செல்வதுதான் வசதி.


தொடர்புக்கு: எஸ். ராமமூர்த்தி பட்டாச்சார்யர்

ஸ்ரீகோலவில்லி ராமர் ஆலயம், திருவெள்ளியங்குடி,
பாலாக்குடி அஞ்சல், திருமங்கலக்குடி (வழி)
தஞ்சாவூர் மாவட்டம்
பின்கோடு: 612 102.
போன்: 0435- 294 3152
மொபைல்: 94433 96212


படங்கள் மற்றும் தகவல் உதவி - திருமதி. பிரேமா ராமலிங்கம்

3 comments:

jagadeesh said...

மிக்க நன்றி.

மதுரை சரவணன் said...

நல்ல ஆன்மீக பதிவு.. வாழ்த்துக்கள்

AALAYAM THOZHUVOM said...

Thanks for the information, but one small correction,this place is not in Kumbakonam-Aduthurai road, please correct,thanks

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Coupons