இந்த வலைப் பூவில் உங்கள் ஊரில் உள்ள ஆலயங்கள் பற்றிய தகவல்களை உங்கள் பெயரிலேயே வெளியிட ஆலய புகைப்படத்துடன் விபரங்களை அனுப்பலாம் aalayankal@gmail.com

Wednesday, February 23, 2011

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை (பகுதி -2)

பிரதான நுழைவு வாயிலான ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் வலது பக்கத்தில் ஆயிரங்கால் மண்டபமும் இடது பக்கத்தில் கம்பத்திளையனார் சந்நிதியும் உள்ளது .இராசகோபுரத்தின் வடதிசையில் உள்ள வாயிலில் "சித்திரமணி மண்டபம்" உள்ளது .ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் ஸ்ரீ பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியில் ரமண மகரிஷி தமது இளம் வயதில் தியானம் இருந்த இடம் அமைந்துள்ளது .ஆனந்த நிஷ்டையில் அசையாது இருந்து தியானம் செய்த இடம் இதுவாகும்.எதிரே உள்ள கம்பத்து இளையனார் திருக்கோவில் அருணகிரிநாதருக்கு காட்சி கொடுத்து முருகபெருமான் அமர்ந்த இடமாகும் .இச்சன்னதியின் தென்புறமாக நான்கு புறங்களிலும் திரு மாளிகை பத்தி உடையதாய்ச் சிவகங்கை தீர்த்தம் உள்ளது.

திருக்குளத்தின் வடமேற்கில் சர்வ சித்தி விநாயகர் கோயில் உள்ளது.இவரை வழிபட்டு கீழே இறங்கினால் பெரிய நந்தியைக் காணலாம்.அதற்கு முன் உத்திராட்ச மண்டபம் உயரமாக காணப்படும்.இதைகடந்து செல்லும்பொது இடதுபக்கம் கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதியும் வலது பக்கம் முருகபெருமான் சந்நிதியும் உள்ளது.இன்னும் சற்று உள்ளே வலதுபக்கம் சென்றால் வன்னியமரத்து விநாயகர் திருக்கோயிலும் உள்ளது.

பெரிய நந்திகேசுரருக்கு நேராக வல்லாள மகாராசா கோபுரம் உள்ளது.அருணகிரிநாத பெருமான் இக்கோபுரத்தின் மீது ஏறி தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள கீழே விழுந்தபோது அவரை முருகபெருமான் தடுத்து ஆட்கொண்ட இடமாகும் .இத்திருக்கோயிலில் முருகபெருமான் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து தலத்திற்கு சிறப்பு செய்துள்ளார் .

மூன்றாம் கோபுரம் கிளிகோபுரம் ஆகும்.அருனகிரிநாத பெருமான் பூத உடலை விட்டு கிளியாக மாறி பரிசத மலர் கொண்டு வரசென்றார். திரும்பி வரும்போது தன உடல் இல்லாததுகண்டு கிளி உருவிலே "கந்தர் அனுபூதி "பாடிய இடம் இக்கோபுரம் ஆகும் .இன்றும் இக்கோபுரத்தில் நிறைய கிளிகள் வாழ்வது சிறப்பு. 

கிளிகோபுர வாயிலை கடந்து சென்றால் மூன்றாம் பிரகாரத்தில் பதினாறுகால் மண்டபம் உள்ளது.இதற்கு தீபதரிசன மண்டபம் எனப்பெயர்.இங்கு திருக்கார்த்திகை நாளில் பஞ்ச மூர்த்திகள் நிற்க மலை மீது தீபம் ஏற்றும் விழா நடைபெறும்.இம்மண்டபம் மங்கையர்க்கரசி என்ற சிவனடியார் கட்டிசிறப்பு பெற்றார்கள் .மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் ஸ்தல விருட்சமான மகிழமரமும் ,பின்புறம் அருணகிரி யோகீஷ்வர் சந்நிதியும் ,வடக்கே அருள்மிகு அம்பாள் சந்நிதியும் ,நேர் எதிரே காளத்தீஸ்வரர் சந்நிதியும் ,அருகில் யாக சாலையும் அமைந்துள்ளது.

கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால் வடக்கே சுப்பிரமணி  சுவாமி,தெற்கே விநாயக பெருமானும் உள்ளனர்.அதை கடந்து உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரம் அமைந்துள்ளது.இப்பிரகாரத்தில் சிவாலயத்தில் அமைய வேண்டிய அனைத்துபரிவார தெய்வங்களின் சந்நிதிகளும் உள்ளன.

நந்தியை வழிபட்டு அண்ணாமலையார் சந்நிதிக்கு செல்லும் முன் பிரதோஷ நந்தி உள்ளது.துவார பாலகர்களை தரிசித்து கருவறையின் முன்புறமுள்ள அர்த்த மண்டபத்தில் நின்று தரிசிக்கும் போது அருணாசலேசுவரர் அருளே திருமேனியாக சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.
(தொடரும்..)  Thursday, February 17, 2011

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை (பகுதி -1)

 திருச்சிற்றம்பலம் 

தில்லை தரிசிக்க முத்தி உண்டாகும், காசியில் இறக்க முத்தி உண்டாகும் ,ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முத்தி உண்டாகும் என ஆன்றோர்கள் இத்தல பெருமையை விவரித்துள்ளனர் .அத்தகைய தொன்மை சிறப்பு வாய்ந்த தலம் பற்றி சற்று விரிவாக நாம் காண இருக்கிறோம். தலபெருமை,திருகோயிலின் அமைப்பு , வரலாறு, வழிபட்டோர் ,சிறப்பு,திருவிழாக்கள் ,மலை ,குகை, தீர்த்தங்கள், கிரிவல மகிமை ,கிரிவல பாதையில் உள்ள ஆஷ்ரமங்கள் என இயன்ற  அளவு விபரங்களை இனி வரும் சில பதிவுகளில் தொடராக காணலாம் 

தலப்பெருமை 
திருமாலுக்கும் , பிரம்மாவுக்கும் அடிமுடி எட்டாத நிலையில் இறைவன் மலை உருவில் தோன்றியது ,ஆதலின் அண்ணாமலை என பெயர் பெற்றது.  கெளரி நகரம் ,தேசு நகரம் ,ஞான நகரம்,தலோசுவரம் சிவலோகம்,சுத்த நகரம், சோணகிரி ,அருணகிரி,அருணை என பல பெயர்கள் இத்தலத்திற்கு உண்டு .

கோயில் அமைப்பு 
திருவண்ணாமலையை ஆண்ட அரசர்களும் மற்ற அரசர்களும் இங்கு பல சிறப்பு பணிகளை செம்மையாக செய்து உள்ளனர். இத்தளம் 24 ஏக்கர் பரப்பில் ஆறு பிரகாரங்களுடன் ஒன்பது ராஜகோபுரங்களுடன் மலையடிவாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .கிழக்கில் உள்ள ராஜ கோபுரம் 11 நிலைகளுடன் 217  அடி உயரமும் கொண்டு தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாக உள்ளது. இது கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டது .அதாவது இறுதி பிரகாரத்தில் உள்ள கோபுரங்களும் மதில் சுவர் பணிகளும் அவர் காலத்தில் நிறைவு பெற்றன.
தெற்கு கோபுரம் திருமஞ்சன கோபுரம் என பெயர் பெற்றது.தினமும் காலையில் அபிஷேக தீர்த்தம் இவ் வாயில் முலம் வந்தமையால் இப்பெயர் பெற்றது.
மேற்கு கோபுரம் பேயகோபுரம் ஆகும் .இது மலையை நோக்கி உள்ளது இதன் தனி சிறப்பு.வடக்கு கோபுரம் அம்மணி அம்மாள் கோபுரம் ஆகும் சிவவழிபாடு  மேற்கொண்டு சிவனடியாராக வாழ்ந்த அம்மணி அம்மாள் என்பவர் இக்கோபுரத்தை கட்டினார்.   
  (தொடரும்....)


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Coupons