இந்த வலைப் பூவில் உங்கள் ஊரில் உள்ள ஆலயங்கள் பற்றிய தகவல்களை உங்கள் பெயரிலேயே வெளியிட ஆலய புகைப்படத்துடன் விபரங்களை அனுப்பலாம் aalayankal@gmail.com

Monday, November 7, 2011

www.aalayangal.com

நண்பர்களே,

இது வரை http://aalayankal.blogspot.com என்ற வலைபூ முகவரியில் இயங்கி வந்த நமது ஆலயங்கள் வலைபூ, இன்று முதல்

என்ற வலைதள முகவரியிலும் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.இயன்ற அளவு தள முகவரியை நண்பர்களுடன் பகிர்ந்து ,அனைவரும் பயனடைய விரும்புகிறோம்.

நட்புடன்

நந்தா


Saturday, November 5, 2011

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலகடம்பூர், கடலூர் மாவட்டம்கடலூர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் வடவாற்று கரையில் அமைந்துள்ளது மேலக்கடம்பூர் . இங்கு ஒரு அழகிய சிவாலயம் அமைந்துள்ளது.இரண்டு குதிரைகள் பூட்டப்பெற்ற அழகிய தேர் வடிவில் அமைந்த கோயில். தேவார பாடல் பெற்ற தலங்களில் இது காவிரி வடகரை தலங்களில் 34வது தலமாக விளங்குகிறது. திருநாவுக்கரசர்,திருஞான சம்பந்தர் ஆகியோர் மூன்று பதிகங்கள் பாடியுள்ளனர். சுந்தரர், மாணிக்கவாசகர் வைப்புதலமாக பாடியுள்ளனர். மேலும் வள்ளலார்,வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் ஆகியோரும் பாடி பரவிய தலம்.


இந்த தேர்வடிவ கோயிலுக்கு கரக்கோயில் என்று பெயர்.கடம்ப மரத்தினை தல மரமாக கொண்ட கோயிலுக்கும் கரகோயில் என பொருள் கொள்ளலாம் மூலவர் சுயம்பு லிங்கமாக உள்ளது சிறப்பு.
இந்திரனின் தாயார் தினமும் இங்கு வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டதாகவும், அதனால் இந்திரன் இம் மூலவரை இந்திர லோகம் கொண்டு செல்ல எண்ணி குதிரைகள் பூட்டிய அழகிய தேரில் வைத்து எடுத்துசெல்லும் போது தல விநாயகரை வணங்காமல் அலட்சியபடுத்தி தேரை நகர்த்துகிறான்.விநாயகர் விஸ்வரூபம் எடுத்து தேரினை காலால் அழுத்த தேர் அழுந்தி கல்லாகிறது ,கோயிலை எடுக்கவந்த  இந்திரன் வினாயகரிடம் பாப மன்னிப்பு கோருகிறான் ஓர் நாழிகையில் கோடி லிங்க பிரதிஷ்ட்டை செய்ய ஆணையிடுகிறார் , இந்திரன் லிங்கம் செய்யசெய்ய உடைந்து கொண்டே இருக்கிறது பிழை உணர்ந்த இந்திரன் தான் என்ற அகந்தை அழிந்து மன்னிப்பு கோர ருத்ர கோடி மந்திரம் சொல்லி ஓர் லிங்கம் பிரதிஷ்ட்டை செய்கிறான் . இந்த புராண வரலாறை முதலாம் குலோத்துங்கன் சிற்ப கலை  சிறப்பு மிக்க அழகிய தேர் வடிவ கோயிலாக கி.பி 1113 ம் ஆண்டில் உருவாக்கினான்.அதற்க்கு முன்னர் இக்கோயில் செங்கற்க்களால் அமைந்திருந்தது

 

கோவிலின் புறசுவர் முழுவதும் சைவ வைணவ கதைகளை விளக்கும் சிற்ப்பங்களும் அறுபது மூன்று நாயன்மார் வரலாறும் சிற்ப்பங்கலாக வடிக்கப்பட்ட்டுள்ளன,
ராஜேந்திர சோழ மன்னன் கங்கை படை எடுப்பின் போது அங்கிருந்த கணபதி சிலைகளை கொண்டுவந்து இக்கோயிலில் பிரதிஷ்ட்டை செய்தான் மேலும் வங்க படையெடுப்பின் போது மஹிபாலனை வென்று அங்கிருந்து பிரதோஷ காலத்தில், ரிஷபத்தின் மீது நின்று ஆடும் சிவனின் சிலையை (தசபுஜரிஷபதண்டவமூர்த்தி) வெற்றி சின்னமாக  கொண்டுவந்தான் பிரதோஷ நாளில் மட்டுமே இச்சிலையினை காணமுடியும் .மேலும் இக்கோயிலை பற்றி அறிந்துகொள்ள http://kadamburtemple.blogspot.com என்ற வலை பூவினை பார்க்கவும் 

Thursday, November 3, 2011

மருதமலை திருக்கோயில், கோவை

மருதமலை திருக்கோயில் ,கோவை

ராஜகோபுர திருப்பணி நடைபெறும் மருதமலை திருக்கோயில் சிறப்பு புகைப்படங்கள் 


திருப்பணி நடை பெரும் ராஜகோபுரம் 


அன்னதான மண்டபம் 


ஏழாவது படைவீடு என அழைக்கபடும்  பெரும் பெருமை பெற்றது மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருகோயில் .பாம்பாட்டி சித்தர் ஜீவசமதியாகி எழுந்தருளி - வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு பெற்ற மருதமலை கோயிலில் இராஜகோபுர திருப்பணி,மடப்பள்ளி கட்டுதல்,சுவாமி திருக்கல்யாண மண்டபம்,வாகன அறைகள்,இளைப்பாறும் மண்டபம் கட்டுதல் போன்ற திருப்பணிகள் நடைபெறுகின்றன . இதற்க்கு நன்கொடையாளர்கள் வரவேற்க்கபடுகின்றனர்.

விபரங்களுக்கு :
துணை ஆணையர் / செயல் அலுவலர் 
அருள்மிகு சுப்பிரமனிய சுவாமி திருக்கோயில்,
கோயமுத்தூர் - 641 046
0422- 2422490, 2423623


Thursday, September 29, 2011

ஸ்ரீ சத்குரு சதா சிவப்பிரமேந்திராள் மஹா சந்நதி , நெரூர்


கரூர் மாவட்டத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சிற்றூர் நெரூர்.இங்கு வயல் வெளிகள் நிறைந்த காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ சத்குரு சதா சிவப்பிரமேந்திராள் மஹா சந்நதி. மிகவும் தொன்மையான வரலாறு கொண்ட சிறப்பு மிக்க தலம் , குடமுழுக்கு கண்டு புதுபொலிவுடன் காட்சி தருகிறது. 


காசி விஸ்வநாதர் ,விசாலாட்சி அம்மன் சன்னதிகள் உள்நுழைந்ததும் நம்மை ஆசிர்வதித்து வரவேற்கிறது.
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  சதாசிவ பிரமேந்திரரர்  அவர்களின் ஜீவசமாதி காசி விஸ்வநாதர் சிலை அமைந்துள்ள கருவறையை சுற்றி வரும் பொழுது அதன் நேர் பின்பக்கம் அமைந்துள்ளது.
அதன் சிறப்பு :
நெரூர் வந்து சேர்ந்த சதாசிவ பிரம்மம் தந்து சீடர்களான புதுக்கோட்டை மகாராஜா,மைசூர் மகாராஜா,தஞ்சாவூர் மகாராஜா ஆகியோரை அழைத்து "இங்கு குகையமையுங்கள்.நான் உட்கார்ந்ததும் சாமகிரியைகளால் மறைத்து விடுங்கள் " என்றார் ."விபூதி,உப்பு,மஞ்சள் தூள்,செங்கற்பொடி போட்டு மூடிவிடுங்கள்.ஒன்பதாம் நாள் சிரசின் மேல் வில்வ விருட்சம் தோன்றும் .பன்னிரெண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வரும்.அதை 12  அடிக்கு கிழபுரம் வைத்து கோயில் காட்டுங்கள் .இந்த வில்வ விருட்சத்திற்கு எந்த மறைப்பும் வேண்டாம் .மேடை போட்டு விடுங்கள் "என்று அருளினார் .

அதன்படியே செய்தனர். அவர் சொன்னபடி ஒன்பதாம் நாள் வில்வ மரம் தோன்றியது .(இன்றும் நாம் வழிபடும் வில்வ விருட்சம் இது தான் ) பன்னிரெண்டாம் நாள் அவர் சொன்னபடி காசியிலிருந்து ஒரு பிரம்மச்சாரி ஒரு சிவலிங்கம் கொண்டு வந்தார் 12  அடிக்கு கீழ்புறம் அதை வைத்து கோயில் கட்டினர்.மகரிஷிகளின் சமாதி மீதே  கோயில் கட்டுவது வழக்கம் .நெரூரீல் மட்டுமே சமாதிக்கு 12  அடிக்கு கீழ்புறம் சிவலிங்கத்தை வைத்து கோயில் கட்டப்பட்டுள்ளது .இங்கு துவாதசாந்த பெருவெளியில் சதாசிவ பிரம்மம் எழுந்தருளியிருக்கிறார்.துவாதசம் எனில் 12  அங்குலம் .அங்குலத்தை அடியாக கொண்டு சிவலிங்கத்தை அமைத்துள்ளனர் .

மிக தொன்மையும் பெருஞ்சிறப்பும் பெற்ற இந்த திருகோயில் காவிரி கரையோரம் வயல் வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது இறைவனின் சித்தம் .
   

Sunday, June 12, 2011

ஸ்ரீபைரவநாதர்-பிரான்மலை

பிரான்மலைநு என்று ஒருவன். தொடக்கத்தில் நல்லவ னாகத்தான் இருந்தான். பிரம்மாவையும் சிவபெருமானையும் எண்ணி, தவங்கள் பல செய்தான். அதன் பலனாக பலம் பெற்று அந்தகாசுரன் என்று பெயர் பெற்றான். அவ்வளவுதான்... அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டான். ஆணவத்தில் அனைவரையும் படாதபாடுபடுத்தினான். எந்த அளவுக்குக் கொடுமை தெரியுமா?

தேவர்களைச் சீலை கட்ட வைத்தான்; பூச்சூடவும் மையிடவும் செய்தான்; தனக்குச் சாமரம் வீசப் பண்ணினான். இவனது கொடுமை தாங்காமல், தேவர்களும் முனிகளும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

ஸ்ரீபைரவரை, அந்தகாசுரனுடன் சண்டையிடப் பணித்தார் சிவனார். போர் நடந்தது. அந்தகாசுரன் இருந்த இடம் தெரியாமல் அழிந்தான். கொடுமைகளில் இருந்து காப்பாற்றப்பட்ட தேவர்கள், தமது நன்றிக் கடனைத் தெரிவிக்க, ஆளுக்கு ஒரு ஆயுதத்தையோ திறனையோ, பைரவருக்குக் கொடுத்தனர்.


கருணைப் பார்வை பார்த்த சிவனார், மெள்ளக் குனிந்து தமது நெஞ்சையே நோக்கினார். முன்னரே, தாருகாவனத்தை எரித்திருந்தார் அல்லவா! அந்த நெருப்பு... அதுதான் காலாக்னி, சிவனாரின் நெஞ்சில் குடிகொண்டிருந்தது. சிறிய பொறியாக அங்கு அடைக்கலம் கண்டிருந்தது. அண்ணல் இப்போது நோக்க... பார்வையைப் புரிந்து கொண்ட காலாக்னி, கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அந்தக் கொழுந்து நெருப்பிலிருந்து வடிவாகி ஓங்கி நின்ற ஸ்வரூபமே, ஸ்ரீபைரவநாதர்.

'சர்வ ஆற்றல்களையும் தமக்குள் ஒடுக்கிக் கொண்டு, பிரபஞ்சம் முழுவதையும் தமக்குள் ஆக்கிக் கொண்டவர் ஸ்ரீபைரவர்' என்று சிவ சூத்திரங்கள் குறிப்பிடுகின்றன. சக்திகளைத் தம்மிடத்தில் கொண்டிருந்தாலும், அந்தந்தத் தருணத்துக்கு ஏற்ப, அஷ்ட சக்திகளில் ஒருவரைத் தம் துணையாகக் கொண்டு, எட்டு விதமான வாகனங்களோடும், எட்டு விதமான தன்மைகளோடும் பைரவர் விளங்கும்போது, அந்தந்தத் தன்மைக்கேற்ப பெயர் கொடுக்கப்பட்டு, அஷ்ட பைரவராக வணங்கப்படுகிறார்.பைரவரைப் பற்றி இன்னும் சில சுவையான தகவல்களும் உண்டு. ஒரு முறை பிரம்மாவும் திருமாலும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தானே படைப்புக் கடவுள் என்ற ஆணவம் மேலோங்க, பிரம்மா, பேச்சுவாக்கில் திருமாலைப் பெரிதும் அவமதித்தார்; தம்மையே வணங்கும்படி பணித்தார். திருமால் செய்வதறியாது தவிக்க, இவற்றையெல்லாம் இன்னொரு பக்கமிருந்து கேட்டுக்கொண்டிருந்த சிவனார், ஆத்திரம் கொண் டார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்க 'பைரவர்' என்னும் தமது அம்சத்தை அனுப்ப, அதுவரை ஐந்து தலைகள் கொண்டிருந்த பிரம்மாவின் மேல் தலையை பைரவ மூர்த்தம் கிள்ளியது. தலை போக, பிரம்மாவின் ஆணவமும் அடங்கியது.

மேற்கூறியபடி சில கதைகள் விளங்க, இன்னும் சில கதைகள், பைரவரை, தக்ஷ யாகத்தோடு தொடர்பு படுத்துகின்றன. தட்சன் யாகம் செய்தான்; சிவனாரை அழைக்காமல் விட்டான்; அவன் மகளான தாட்சாயினி, கணவர் சொன்னதையும் கேட்காமல், தந்தையின் யாகத்துக்குச் சென்றாள்; அவமானப்பட்டாள். தட்சன் மகள் என்னும் நிலையே தேவையில்லை என்று நெருப்பில் தம்மையே ஆகுதியாக்கிக் கொண்டாள். பாதி எரிந்து கொண்டிருந்த அந்த உடலை அப்படியே எடுத்துத் தம் தோள் மீது போட்டுக் கொண்டு, சினத்துடன் அலைந்தார் சிவனார். அவருக்கு சாந்தம் ஏற்படுத்த விரும்பிய திருமால், சிவனுக்குத் தெரியாமல், அவர் பின்னாலேயே சென்று, சக்கராயுதத்தைக் கொண்டு, தன் சகோ தரியின் (பார்வதி அவரது சகோதரிதாமே) உடலைத் துண்டாக்கினார். அம்மையின் உடல் துண்டங்களும் அவரது உடை ஆபரணங்களும் விழுந்த இடங்களே, 'சக்தி பீடங்கள்' என்றாயின. சக்தி பீடங்களில், தமது அம்சமான பைரவரைக் காவல் தெய்வமாகச் சிவனார் நிறுவினார்.வடமொழியில் பைரவர் என்றும், தமிழில் வைரவர் என்றும், வட மாநிலங்களில் பைரோன், பைரத்யா என்றும், நேபாளத்தில் பைராய் என்றும் வழங்கப்படுகிறபைரவர், சிவனாரின் உக்கிர மூர்த்தமாவார். அஷ்ட சக்திகளுடனும், எட்டுவித தன்மைகளுடனும் கூடிய அஷ்ட பைரவர்களிலிருந்து ரூப பேதங்கள் (வடிவங்கள்) பிரிந்து, 64 யோகினிகளுடன் கூடிய அஷ்டாஷ்ட (அதாவதுஎட்டு எட்டு... அறுபத்துநான்கு) பைரவர்கள் என்றும் சில சாத்திரங்களில் வணங்கப்படுவதுண்டு.

தன்மைக்குத் தக்கவாறு, சாத்விக, ராஜஸிக அல்லது தாமஸிகதாரியாகவோ, இரண்டு, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடனோ இவர் காட்சி தருவதுண்டு. சிவனாரின் அஷ்டாஷ்ட வடிவங் களைப் பற்றிக் கூறுகிற 'சிவப்பராக்கிரமம்' எனும் நூல், சிவபெருமானின் 64 வடிவங்களில், பைரவ மூர்த்தம் ஒன்று என விவரிக்கிறது. இதன்படி, இரண்யாட்சதனின் மகனான அந்தகாசுரனை வென்ற மூர்த்தம் என்பதால் பைரவருக்கு, 'அந்தஹாரி' என்பது சிறப்புப் பெயர்.அசிதாங்க பைரவராக- அன்னம், குரோதன பைரவராக- கருடன், ருரு பைரவராக- ரிஷபம், உன்மத்த பைரவராக- குதிரை, சண்ட பைரவராக- மயில், கபால பைரவராக- யானை, பீஷண பைரவ ராக- சிங்கம் ஆகியவற்றை வாகனங்களாகக் கொண்டவருக்கு, கால பைரவர், சம்ஹார பைரவர் போன்ற நிலைகளில் நாய் வாகனம். அந்தஹாரிக் கும் நாய் வாகனமே. சொல்லப்போனால்... சிவ அம்சம், பைரவரான போது, வேதங்களே நாய் வடிவம் பெற்றன. எனவே, பைரவர் என்றாலே நாயைக் குறிப்பதாக எண்ணுவதுண்டு.


நாய் வாகனம் கொண்டு, காதுகளில் குண்டலங் களாகவும் கைகளில் வளையணியாகவும் கால்களில் சதங்கைகளாகவும் பாம்புகளை ஆபரணங்களாக அணிந்து, பாசம், அங்குசம், திரிசூலம், இடி, கபாலம், உடுக்கை என்று வெவ்வேறு விதமான ஆயுதங்கள் ஏந்தி, சிவன் கோயில்கள் பலவற்றில், தனிச் சந்நிதியில் கால பைரவர் காட்சி கொடுப்பார். அநேகமாக, சிவன் கோயில்களின் உள் பிராகார வடக்குச் சுற்றில் அல்லது வடகிழக்கு மூலையில், கால பைரவர் சந்நிதி இருக்கும்.

துன்பங்களையும் நோய்களை யும் வினையையும் தீர்க்கும் ஸ்ரீபைரவரை வழிபட, தமிழகத்தில் பல தலங்கள் உண்டு. அவற்றுள் சிறப்பு மிக்க ஒரு தலத்தில்... பூமியில் சிவ--பார்வதி எழுந்தருளியிருக்க, சொர்க்கத்தில் மங்கைபாகர் எழுந்தருளி திருமணக் காட்சி தர, அந்தரத்தில் பைரவர் அருள்கிறார்!


ஒரே நேரத்தில் சிவனாரின் அருள் தலமாகவும், அம்மை- ஐயன் திருமணத் தலமாகவும், தேவர்கள் கூடிய பேரூராகவும், குன்றாடும் குமரனின் சிறப்புத் தலமாகவும், கோயில் கட்டுமானப் பெருமைக்கான குடைவரைத் தலமாகவும், அமர்ந்த நவக்கிரகங்களைக் கொண்ட அற்புதத் தலமாகவும், பெயரில்லா மரமே தலமரமான விநோதத் தலமாகவும், குன்றக்குடி (திருவண்ணாமலை) ஆதீனத்தின் ஐந்து கோயில் தேவஸ்த்தான ஆளுகைக்கு உட்பட்ட அழகுத் தலமாகவும், பைரவப் பெருமானின் பெருமிதத் தலமாகவும் திகழ்கிற திருத்தலம் செல்வோமா?


பிரான்மலை! இலக்கியத்தில் 'திருக்கொடுங் குன்றம்' என்று வழங்கப்படும் இந்த திருத்தலத்துக்கு, இப்போது பிரான்மலை என்று பெயர். திண்டுக்கல் சிங்கம்புணரிக்கு அருகே உள்ளது இந்தத் தலம். திண்டுக்கல்- கொட்டாம்பட்டு- சிங்கம்புணரி வழியாக பிரான்மலை செல்லலாம். அதுபோல்...திருச்சி -கொட்டாம்பட்டு- பிரான்மலை; திருப் புத்தூர் (ராமநாதபுரம்)- சிங்கம்புணரி- பிரான்மலை; மதுரை- மேலூர்- சிங்கம்புணரி- பிரான்மலை; பொன்னமராவதி - பிரான்மலை என்று இந்தத் தலத்துக்குச் செல்லலாம்.


மதுரையிலிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்துகள், பிரான்மலை வழியாகச் செல்கின்றன. மதுரையிலிருந்து சுமார் 80 கி.மீ, திருப்புத்தூரிலிருந்து சுமார் 24 கி.மீ, சிவகங்கையிலிருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்.

பாரிவள்ளல் வாழ்ந்த பறம்பு மலை இதுதான் என்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஏதுமில்லை! ஆனால் கோயில் வளாகத்துக்குள், முல்லைக்குத் தேர் தந்த பாரியின் செயலை நினைவுகூரும் வகை யில் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திருக் கோயில் பெரு விழாவில், ஒரு நாள் பாரி விழா நடைபெறும்.


ஊரை அடைந்து, திருக்கோயிலுக்குச் செல்கி றோம். கோயில் முகப்பு வரை வாகனத்தில் செல்லலாம். வலப் பக்கத்தில் குளம்; 'அடையாளஞ்சான் குளம்' என்கிறார்கள். எதிரில் பெரிய மண்டபம். இந்த மண்டபத்தில் நுழைந்து இடப் பக்கம் திரும்பினால், கோயிலின் தெற்கு வாயில். அதன் வழி யாகக் கோயிலுக்குச் செல்ல வேண்டும். தெற்கு வாயிலில் நுழைந்தால், நீண்ட பிராகாரம் போல் ஓர் அமைப்பு. இடப் பக்கம் திரும்பி நடந்தால், கோயிலுக்குச் செல்லலாம்; திரும்பாமல், எதிரில் தெரியும் படிகளில் ஏறினால், பைரவர் சந்நிதிக்குச் செல்லும் வழி என்று போட்டிருக்கிறது. வலப் பக்கம் திரும்பி சில அடிகளே நடந்தால், பெரிய குளம் ஒன்று மலைச் சரிவில் தெரிகிறது. திருக்கோயில் தீர்த்தமான இதுவே, 'தேனாழி தீர்த்தம்'.


பூமி, அந்தரம், சொர்க்கம் என்று மூன்று நிலைகளில் உள்ள கோயில் இது! தெற்கு நுழை வாயிலின் இடப் பக்கம் திரும்பி, முதலில் நாம் செல்லப்போவது மலையடிவார 'பூமி' கோயில்.

வானில்பொலி (வு)எய்தும் மழை மேகம்கிழித்து ஓடிக் கூனல்பிறை சேரும்குளிர் சாரல் கொடுங்குன்றம் ஆனில்பொலி ஐந்தும் அமர்ந்து ஆடிஉலகு ஏத்தத் தேனில்பொலி மொழியாளடு மேயான் திருநகரே

_ என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடிக் களிக்கும் தலத்துக்கு உரியது, இந்த மலையடிவாரக் கோயிலேயாகும்.வாயிலில் இடப் பக்கம் திரும்பி நடக்கத் தொடங் கினோம் இல்லையா, அப்படியே நடந்தால், கோயிலின் தெற்குப் பிராகாரத்தோடு சேர்ந்து விடுவோம். வழியில் திரும்பி, மூலவர் சந்நிதிக்குச் செல்ல முடியும் என்றாலும், திருச்சுற்று வலம் வந்து சுவாமியை வணங்குவதுதானே நம்முடைய தேவார வழக்கம். அதன்படியே செல்லலாம், வாருங்கள்.


பிராகாரத் தெற்குச் சுற்றில், அறுபத்துமூவர். தென் மேற்கு மூலையில் முக்குறுணி விநாயகர். மேற்குச் சுற்றில் அடுத்து அம்மையப்பர்; தொடர்ந்து விஸ்வநாதர் - விசாலாட்சி. பின்னர், சொக்கநாதரும் மீனாட்சியும். அடுத்ததாகத் தொடர்ந்தால், திருக் கல்யாண மண்டபமும், அப்படியே அம்மன் கோயி லுக்குச் செல்லும் வழியும் உள்ளன. வலம் சுற்றிக் கொடுங்குன்றீசரை வணங்கலாம் வாருங்கள். வடக்குச் சுற்றில் வாகனங்கள். வலம் வந்து கிழக்குச் சுற்றை அடைகிறோம். கொடிமரம், பலிபீடம், நந்தி. மூலவர் சந்நிதி முகப்பில் விநாயகரையும் முருகரை யும் வணங்கி நிற்கிறோம்.

முகப்பு வாயிலில் பெரிய, அழகான விளக்குத் திருவாசி. மகாமண்டபம் நுழைந்து, மூலவரை நோக்கியபடியே நிற்கிறோம். சிறிய லிங்க மூர்த்தம். வட்ட வடிவ ஆவுடையார். இவர்தாம் கொடுங் குன்றீசர், கொடுங்குன்றநாதர், கடோரகிரீஸ்வரர், பிரச்சந்திரகிரீஸ்வரர், குன்றாண்ட நாயனார், கொடுங்குன்றம் உடைய நாயனார். மகோதர மகரிஷியும் நாகராஜனும் வழிபட்ட நாதர். உள்ளம் எல்லாம்உருகிக் குளிர, உணர்வெல்லாம் ஒளிர, வணங்கி நிற்கிறோம். நற்றவரும் கற்ற நவ சித்தரும் வாழ்த்தி உற்ற கொடுங் குன்றத்து என் ஊதியமே என்று ராமலிங்க வள்ளல் பெருமான் பாடிப் பரவியது நினைவில் தோன்ற, அதனை எண்ணியபடியே வழிபடுகிறோம்.


மகோதர மகரிஷி ராமாயண காலத்தைச் சேர்ந் தவர் என்கின்றன புராணங்கள். ராமாயணத்தில் வரும் தண்டகாரண்ய- ஜனஸ்தானப் பகுதியில் வசித்த இவர், தலங்கள் பலவற்றுக்கும் சென்று வழி பட்டு, நிறைவாக இங்கு வந்து வணங்கினாராம். அதெல்லாம் சரி! அதென்ன கடோரகிரீஸ்வரர் என்று திருநாமம்? கொடுங்குன்றம் என்பதுகூட என்ன?முதலில் புரியாது! ஆனால், பூமி கோயிலை விட்டு மலைமீது இருக்கும் கோயிலுக்குப் போவதற்காக மலை ஏறும்போது தெரியும். இப்போது படிக்கட்டுகள் உள்ளன; குறுக்கு வழியில், கோயில் அர்ச்சகர் காட்டும் வழியில் ஏறினால்கூட கடினமாக இல்லை. ஆனால், வெளியே வந்து மலையை அண்ணாந்து பார்த்தால், மலையின், கரடுமுரடும் செங்குத்துத் தன்மையையும் புலப்படுகின்றன. அப்படியானால், அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும்?'கடோரம்' எனும் வடமொழிச் சொல்லுக்கு கடினம் என்று பொருள். கடினமான மலை கடோரகிரி அல்லது கொடுங்குன்றம். பிரச்சந்திர கிரி என்றும் ஒரு பெயர். பிரசண்ட கிரி என்றுஇருந் திருக்க வேண்டும். பிரசண்டம் என்றாலும் கடினம். அதுவே காலப் போக்கில் பிரச்சந்திர கிரி என்று மாறிவிட்டது போலும்! பரவாயில்லை, பிரகாசமான இறைவருக்கு இதுவும் பொருத்தம் தான்!

'கடினமான' பெயராக இருக்கிறதே என்கிறீர்களா? கடினம் போலத் தோன்றினாலும், ஈடுபாடும் முயற்சியும் இருந்தால் மலை மீது ஏறிவிடுகிறோம் அல்லவா! அப்படித்தான் இறைவனும். கடினம் போல் தோன்றினாலும் பக்தியும் பிரயத்தனமும் இருந்தால் அவரைப் பற்றி விடலாமே! அதனால் தான், கடோரகிரி, பிரான்மலை (பெருமானுடைய, பிரானுடைய மலை) ஆகிவிட்டது; கொடுங்குன்ற நாதர், குன்று ஆண்ட நாயனார் ஆகி விட்டார்.பிரான்மலை என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் இறுதியில் இருக்கும் உயரமான குன்றுகளில் ஒன்று. சுமார் 2,000 மீட்டர் உயரம் கொண்ட இதன் மீது முன்னர் கோட்டை இருந்ததற்கான சிதிலங்கள் உள்ளன. இந்த மலையைப் பற்றிய புராணக் கதைகளும் சரி, வரலாற்றுத் தகவல்களும் சரி, சுவாரஸ்யமானவை.சிவபுராணத்தின்படி, இது, மேரு மலையின் ஒரு பகுதி. ஆதிசேஷனுக்கும் வாயுக்கும் போட்டிவந்து, ஆதிசேஷன் மேருவை அழுத்திக் கொள்ள... வாயு, பலம் கொண்ட மட்டும் வீசித் தள்ளிய கதை நினைவிருக்கிறதா? அவ்வாறு வாயுதேவன் வீசிய போது, மேருவிலிருந்து பிய்ந்து வந்த துண்டங்களே காளத்தி மலையாகவும், திருச்செங்கோட்டு மலையாகவும் உள்ளன என்று ஆங்காங்கேபார்த் திருக்கிறோம். அத்தகைய துண்டங் களில் ஒன்றுதான், பிரான் மலையாக இருக்கிறதாம்!வெகு தூரத்திலிருந்தும் உயரத்தில் இருந்தும் இதைப் பார்த்தால், இந்த மலையே சிவலிங்க வடிவத்தில் இருப்பது தெரியும். அதனால்தான், பிரான்மலை.இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்திலும், இந்த மலை முக்கியத்துவம் பெற்றது. 17-ஆம் நூற்றாண்டில், ராமநாதபுர மன்னராக இருந்தவர் ரகுநாத சேதுபதி என்கிற கிழவன் சேதுபதி. சிவகங்கை பகுதியில் இருந்த நாலு கோட்டை பெரிய உடையாத்தேவரைப் பற்றிக் கேள்விப் பட்ட கிழவன் சேதுபதி, படை ஒன்றை நிர்வகிப்பதற்கான அளவு நிலங்களைத் தேவருக்கு வழங்கினார்.கிழவன் சேதுபதியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த விஜய ரகுநாத சேதுபதி, பெரிய உடையாத் தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்குத் தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரைத் திருமணம் செய்து கொடுத்து பிரான்மலை, திருப்புத்தூர், சோழபுரம், திருப்புவனம் ஆகிய கோட்டைகளின் பொறுப்பையும் கொடுத்தார். பின்னர், ராஜா முத்து விஜயரகுநாத பெரிய உடையாத் தேவர் என்ற பெயரில் சிவகங்கையின் முதல் அரசரானார் சசிவர்ணத் தேவர். இவரின் மகனான முத்து வடுகநாதருடைய காலத்திலும், அவர் மனைவியான வேலு நாச்சியார் காலத்திலும் விடுதலைப் போர்கள் கிளர்ந்தன.

வேலு நாச்சியார் காலத்தில் தான், மருது சகோதரர்கள் ஆளுகைஏற்றனர். வீரபாண்டிய கட்ட பொம்முவின் சகோதரரான ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத் தனர் என்பதே, மருது சகோதரர்கள் மீது ஆங்கிலேயர்கள் கொண்ட முதன்மை வெஞ்சினம்.மலையின்மீது, வாலியுல்லா ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் தர்கா உள்ளது.

ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்த இடம் என்று பிரான்மலை பெருமை கொள்கிறது. அப்போதைய காலத்தில், கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து பாக் ஜலசந்தி வரை நீண்டு கிடந்த அடர்ந்த காடுகளில், பிரான்மலையும் அடங்கியிருந்தது. மலை மீது, 'ஊமையன் குடம்பு' என்று ஒரு குகை உண்டு. குடம்பு என்பது ஆழமான குகை என்று பொருள்படும். இந்தக் குகைதான் ஊமைத்துரை ஒளிந்திருந்த இடம் என்கிறார்கள். குகையின்மீது, ஊமையன் இருக்கை என்று ஒரு பெரிய வட்டப்பாறை. அதிலிருந்து கீழே இறங்குவதாக இருந் தால், பிரான்மலையின் செங்குத்துச் சரிவில்தான் இறங்க வேண்டும். அருகில், காசிசுனை என்று தெள்ளத் தெளிந்த நீரூற்று. எங்கு வற்றினாலும், இங்கு நீர் வற்றுவதே இல்லையாம். ஆனால், ஊற்றுக்கண் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை.இப்போதும்கூட, மக்கள் பணியே மகேசன் பணி என்பதை மிகச் சிறப்பாக நிறுவிக் கொண்டிருக்கும் குன்றக்குடி (திருவண்ணாமலை) ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கோயிலாகத் திகழும் பிரான் மலை, வெகு நேர்த்தியாகப் பராமரிக்கப் படுகிறது.

படங்கள் மற்றும் தகவல் உதவி - திருமதி. பிரேமா ராமலிங்கம்
Monday, June 6, 2011

சுக்கிர தோஷம் நீங்க கோலவில்லி ராமரை தரிசியுங்கள்!

ன்னிரு ஆழ்வார்களால் போற்றிப் பாடப் பெற்ற 108 திவ்ய தேசத் திருத்தலங்களுள் ஒன்றான திருவெள்ளியங்குடிக்கு, விசேஷ பெருமை உண்டு. அதாவது, இந்த திவ்ய தேசத் திருத்தலம் ஒன்றைத் தரிசித்தாலே போதுமாம்... 108 திருத்தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்குமாம்.


திருவெள்ளியங்குடி பெருமாளது புகழும் விசேஷமும் பத்துப் பாசுரங்களில் திருமங்கை ஆழ்வாரால் பாடப் பெற்றுள்ளது. திருஇந்தளூரில் (மயிலாடுதுறை) பெருமாளின் சேவை தனக்குக் கிடைக்கத் தாமதம் ஆனதால், மனம் நொந்தார் திருமங்கை ஆழ்வார். இவரை சாந்தப்படுத்தும் விதமாக திருவெள்ளியங்குடி பெருமாளான க்ஷீராப்திநாதரே, தன் தலத்துக்குத் திருமங்கை ஆழ்வாரை அழைத்துத் தரிசனம் தந்ததாகக் கூறுவர். க்ஷீராப்திநாதரே இங்கு மூலவர் என்றா லும், 'ஸ்ரீகோலவில்லி ராமர்' என்கிற திருநாமமே மங்களாசாசனப் பெயர். எனவே, மூலவரையும் கோலவில்லி ராமர் என்றே அழைப்பது வழக்கத்தில் இருக்கிறது.

திருவெள்ளியங்குடி எனும் இந்தத் திருத்தலம் நான்கு யுகங்களிலும் புகழ் பெற்று இருந்துள்ளது. கிருத யுகத்தில்- பிரம்ம புத்திரம் என்றும், திரேதா யுகத்தில்- பராசரம் என்றும், துவாபர யுகத்தில்- சைந்திர நகரம் என்றும், கலியுகத்தில்- பார்க்கவபுரம் என்றும் திருவெள்ளியங்குடி போற்றப்படுகிறது.

சுக்கிரன் (இதனால் இது வைணவ சுக்கிரத் தலம் எனப்படுகிறது), பிரம்மன், பராசரர், இந்திரன், பிருகு முனிவர், அசுர சிற்பியான மயன், மார்க்கண்டேய மகரிஷி, பூமாதேவி முதலானோருக்கு பெருமாள் இங்கே காட்சி தந்து அருளி உள்ளார்.


பிரம்மன்,சிவபெருமான்மற்றும்இந்திரன்முதலானதேவாதிதேவர்கள் திரளாகத் திரண்டு வந்து, இந்தஎம்பெருமானின் கல்யாண குணங்களில் ஈடுபட்டுப் போற்றிக் கொண்டாடும் தலம் இது. எனவே, மாங்கல்ய பிராப்தம் அமைய விரும்புவோர், திருமணம் தடைபடுவோர் இங்கு வந்து பிரார்த்தித்து உரிய வழிபாடுகளைச் செய்தால், பலன் உண்டு. சுக்கிரனுக்குக் கண்பார்வை அருளிய தலம் என்பதால், கண் சம்பந்தமான குறைபாடு உள்ளோரும் இங்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள்.


தல விருட்சமாக செவ்வாழையை (கதலி) கொண்ட தலம். ஆலயத்தின் பிராகாரத்தில் கருங்கல் தரையில் முளைத்துள்ள செவ்வாழை மரங்கள், பச்சைப் பசேலென்று கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சி தருகின்றன!


இப்படிப் பல சிறப்புகள் கொண்டு, தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் விளங்கும் திருவெள்ளியங்குடி ஸ்ரீகோலவில்லி ராமர் ஆலயத்தை தரிசிப்போம், வாருங்கள்!


எங்கே இருக்கிறது திருவெள்ளியங்குடி?


கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையில், சோழபுரத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு பயணித் தால் திருவெள்ளியங்குடி. சோழபுரத்தை அடுத்து வரும் திருப்பனந்தாளில் இறங்கினா லும் திருவெள்ளியங்குடிக்கு இதே 6 கி.மீ. தொலைவுதான். சோழபுரம் மற்றும் திருப்பனந்தாளில் இருந்து ஆட்டோ மற்றும் வாடகை கார் வசதிகள் இருக்கின்றன.


கும்பகோணம்- ஆடுதுறை சாலையில் பயணித்தால், முட்டக்குடி என்கிற கிராமத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும்.


திருப்பனந்தாள்- ஆடுதுறை சாலையில் மையமாக திருவெள்ளியங்குடி இருக்கிறது. ஆடு துறையில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது முட்டக்குடி. இங்கிருந்து ஆலயத்துக்கு சுமார் 3 கி.மீ. தொலைவு.


திருவெள்ளியங்குடிக்கு நேரடிப் பேருந்து வசதி அவ்வளவாக இல்லை. கும்பகோணத்தில் இருந்து புறப்படும் 2-ஆம் எண்ணுள்ள நகரப் பேருந்து, தினமும் ஒரு சில டிரிப் மட்டுமே (அணக்குடி வழியாக) திருவெள்ளியங்குடி செல்லும். மற்ற நேரங்களில் கும்பகோணத்தில் இருந்து திருப்பனந் தாள் வரை செல்லும்.


புராதனமான ஆலயம் ஒன்றை தரிசிக்கச் செல்லலாம் என்றால், அங்கு செல் வதற்கு உண்டான வழித் தடத்தில் இவ்வளவு குழப்பமா என்று யோசிக்கிறீர்களா? என்ன செய்வது? கஷ்டப்பட்டால்தான் நல்லதைப் பெற முடியும். முறையான வழித் தடம் அமையாத ஆயிரக்கணக்கான புராதன ஆலயங்கள் நம் தமிழக கிராமங்களில் எவரது கண்களுக்கும் படாமல் இருக்கத்தான் செய்கின்றன. இது போன்ற ஆலயங்கள் பற்றிய தகவல்களை அறிய நேரிடும்போது, 'போக்குவரத்து வசதி சரியாக இல்லையே' என்றெல்லாம் குறைபட்டுக் கொள்ளாமல், ஒரு சில சிரமங்களை எதிர்கொண்டாவது பயணித்து, இதுபோன்ற ஆலயங்களைத் தரிசிக்க வேண்டும். அப்படிப்பட்ட தரிசனத்தில் இருக்கும் சுகமே அலாதி! அனுபவப் பட்டவர்களுக்கு இதன் அருமை புரியும்.


இனி, திருமங்கை ஆழ்வார் திருவெள்ளியங்குடி திருத்தலத்துக்கு வந்த கதையைப் பார்ப்போம். ஒவ்வொரு தலமாகத் தரிசித்தபடி சோழ நாட்டில் பயணித்துக் கொண்டிருந்தார் திருமங்கை ஆழ்வார். திருவெள்ளியங்குடி திருத்தலத்துக்கு வந்தவர், மூலவர் க்ஷீராப்திநாதர் திருமேனியின் அழகில் சொக்கிப் போனார். திருஇந்தளூரில்

பெருமாளின் தரிசனம் தனக்குக் கிடைக்காததால் மனம் வருந்தி பயணித்துக் கொண்டிருந்த ஆழ்வாரை, இந்த ஊர் பெருமாள் வலிய அழைத்து அவருக்குத் தரிசனம் தந்தாராம். எனவே, அதுவரை க்ஷீராப்திநாதன் என்று அழைக்கப்பட்டு வந்த மூலவரை, 'கோலவில்லி ராமர்' என்று செல்லமாக அழைக்க ஆரம்பித்தார் திருமங்கை ஆழ்வார். தான் அழைத்த பெயரையே தனது பாசுரங்களிலும் வெளிப்படுத்தினார்.காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை யுறக்
கடலரக்கர்தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த
கோலவில் இராமன்றன் கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து
வீழ்ந்தன உண்டு மண்டி
சேற்றிடைக் கயல்களுகள் திகழ் வயல்சூழ்
திருவெள்ளியங்குடி யதுவே.

என்கிறார் திருமங்கை ஆழ் வார் (பெரிய திருமொழி).


பொருள்: வீசுகின்ற பெரும் காற்றிலே இலவம் பஞ்சானது தன் அடையாளத்தை எங்கேயோ தொலைத்து அழிந்து போய் விடுகிறது.

அதுபோல், அரக்கர் களுடைய கடல் போன்ற பெரும் படைகள் தோல்வியுற்று, அல்லலுற்று மெள்ள மெள்ள எமலோகம் சென்று சேர்கின்றன. இது எப்படி நிகழ்கிறது? தன்னிடம் உள்ள அழகிய வில்லில் - கொடிய அம்புகளைத் தொடுத்து இந்த அரக்கர் படைகளை அழித்தாராம் ஸ்ரீராமபிரான். இத்தகைய ஸ்ரீகோல வில்லிராமர் (அழகிய வில்லை உடைய ராமர் என்பது பொருள்) திருக்கோயில் கொண்டுள்ள இடம் திருவெள்ளியங்குடி ஆகும் என்று இந்த பாசுரத்துக்கு அழகாக விளக்கம் தருகிறார் ஆழ்வார். இந்த ஆலயத்தின் தல விருட்சமான செவ்வாழைபற்றியும் தன் பாடலில் சொல்லி இருக்கிறார்.

ஆழ்வாரின் சிறப்பைப் பார்த்தோம். இனி, இந்தக் கோலவில்லி ராமரை, அசுர குல சிற்பியான மயன் போற்றி வணங்கிய கதையைப் பார்ப்போமா?

புராண காலத்தில் தேவர்கள், அசுரர்கள் என்று இரு பிரிவினர் இருந்தனர். தேவர்களின் சிற்பியாக விஸ்வகர்மாவும், அசுரர்களின் சிற்பியாக மயனும் இருந்து வந்தனர். தேவர்களுக்கான மாளிகைகளைக் கட்டிக் கொடுத்து நற்பெயர் பெற்றார் விஸ்வகர்மா.


அதோடு, ஸ்ரீமந் நாராயணன் உறையும் திருக் கோயில்களை - அவரது பரிபூரண அருள் பெற்று, நிர்மாணிக்கும் பேறு பெற்றார் விஸ்வகர்மா.


தேவ சிற்பியான விஸ்வகர்மாவுக்கு இப்படியரு வாய்ப்பு கிடைத்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால், இதே ஆசை அசுர குல சிற்பியான மயனுக்கும் வந்தது. அதாவது, சர்வ வியாபியான ஸ்ரீநாராயணனின் அருள் பெற்று, அழகிய விமானத்துடன் கூடிய திருக்கோயில் ஒன்றை அந்தப் பரந்தாமனுக்குக் கட்ட விரும்பினான். விஸ்வகர்மா வுக்குக் கிடைத்த பேரும் புகழும் தனக்கும் கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டான் மயன்.


'இது சாத்தியமா? என்னால் முடியுமா?' என்று மனதுக்குள் குழப்பம் கொண்ட மயன், பிரம்ம தேவனை அணுகி, தன் விருப்பத்தைத் தெரிவித்தான். பிரம்மதேவர்

ஆச்சரியம் அடைந்தார். 'அசுர குல சிற்பிக்கு, இப்படியும் ஒரு ஆசையா? எல்லாம் அந்த நாராயணனின் விளையாட்டுதான் போலும்!' என்று மெள்ள புன்னகைத்தவர், ''ஓர் உபாயம் இருக்கிறது. உன்னால் அதைச் செய்ய முடியும். விஸ்வ
கர்மாவானவர் பல திருக்கோயில்களை அமைத்தது, பூர்வ ஜென்மத்தில் அவர் செய்த புண்ணியத்தின் பலன்தான். உனக்கும் அப்படி ஒரு பேறு வாய்க்க லாம். அதற்குச் சிறந்த வழி- தவம். புண்ணிய நதியான காவிரியின் கரையில் உனக்குப் பிடித்தமான ஓர் இடத்தில் அமர்ந்து, ஸ்ரீமந் நாராயணனை நினைத்துக் கடுமையாக தவம் இரு. இதற்கு உரிய பலன் நிச்சயம் கிடைக்கும். போய் வா'' என்று மயனுக்கு ஆசி வழங்கி அனுப்பினார்.


பிரம்மனின் சொல்படி, பூலோகம் வந்து காவிரிக் கரையோரமாக பயணித்து தவம் இருப்பதற்குத் தகுந்த இடம் தேடினான் மயன். இப்போது திருவெள்ளியங்குடி என்று அழைக்கப்படும் இந்த திருத்தலத்துக்கு வந்தான். இங்கு மார்க்கண்டேய மகரிஷி தவம் இருப்பதைக் கண்டு, தான் தவம் இருப்பதற்கும் எம்பெருமானைத்

துதிப்பதற்கும் இதுவே உகந்த தலம் என்று கருதி, தவத்தைத் தொடங்கினான்.


ஸ்ரீமந் நாராயணனும் மயனின் தவத்துக்கு இரங்கி அவனுக்குக் காட்சி கொடுத்தார். எப்படி தெரியுமா?


ஸ்ரீமந் நாராயணன் தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் முதலான ஆயுதங்களைத் தரித்துத் திருமாலாக மயனுக்குக் காட்சி கொடுத்தார். ஆனால், இரண்டே திருக்கரங்கள் கொண்டு- அவற்றில் வில்லும் அம்பும் தரித்துக் கோலவில்லி ராமனாக தனக்குக் காட்சி தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தான் மயன். பக்தனது வேண்டு கோளுக்கு இணங்கி, தன் மேற்கரங்களில் இருந்த சங்கு- சக்கரம் ஆகிய ஆயுதங்களை அருகில் இருந்த கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு, மயன் விரும்பிய கோலத்திலேயே அவனுக்குக் காட்சி தந்தாராம் பெருமாள். இதில் பெரிதும் மகிழ்ந்த மயன் - அழகிய மதில்கள், சுற்றுப் பிராகாரங்கள், மண்டபங்கள், விமானங்கள் என்று இந்த ஆலயத்தை அழகுற அமைத்ததாகத் தல புராணம் கூறுகிறது.


மயனுக்குக் கோலவில்லி ராமனாகக் காட்சி தருவதற்காகத் தன் கைகளில் இருந்த சங்கு மற்றும் சக்கரத்தைக் கருடாழ்வாரிடம் கொடுத்தார் அல்லவா? அப்போது கருடாழ்வார் அதை எப்படிப் பெற்றுக் கொண்டார் தெரியுமா? அமர்ந்த நிலையி லும் இல்லாமல், நின்ற நிலையிலும் இல்லாமல் எழுகின்ற நிலையில், பெருமாளிடம் இருந்து இந்த ஆயுதங்களை பெற்றுக் கொண்டாராம்!


எனவே, திருவெள்ளியங்குடியில் மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரே அருள் பாலிக்கும் கருடாழ்வாருக்கு நான்கு திருக்கரங்கள். ''இப்படியரு கோலத்தில் அருள் பாலிக்கும் கருடாழ்வாரை வேறு எங்கும் தரிசிப்பது அபூர்வம். இந்த கருடாழ்வாரை வழிபடு வோர்க்கு சகல நலன்களும் கிடைக்கும். வாகனங் களில் செல்பவர்கள் இவரை வேண்டி வழிபட்டால், விபத்துகள் ஏதும் நிகழாது'' என்கிறார் ஆலய பட்டாச்சார்யர்.


அசுர குல சிற்பிக்கு மட்டுமல்ல... அசுர குல குருவுக்கும் இந்த கோலவில்லி ராமர் அருள் பாலித்திருக்கிறார்!


இந்தத் தலம், ஸ்ரீமந் நாராயணனின் தசாவதாரங் களில் ஒன்றான வாமன அவதாரத்துடனும் தொடர்பு உடையது. மஹாபலியின் செருக்கை அடக்க வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள், அவனிடம் மூன்றடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். மகா பலிக்குக் குருவாக இருந்தவர் சுக்கிராச்சார்யர். அசுர குலத்துக்கே இவர்தான் குரு. 'வந்திருப்பவன் சாதாரணமானவன் அல்ல... ஸ்ரீமந் நாராயணனே' என்பதை அறிந்த சுக்கிராச்சார்யர், வாமனன் கேட்டபடி மூன்றடி நிலத்தை மகாபலி தாரை வார்த்துக் கொடுக்கக் கூடாது என்று விரும்பினார். திருமாலின் அவதார நிகழ்வையும், தானம் கொடுத்த பின் மகாபலியின் நிலையையும் சுக்கிராச்சார்யர் நன்றாகவே அறிவார். இருந்தாலும், தாரை வார்த் துக் கொடுப்பது என்கிற தன் முடிவில் இருந்து பின்வாங்க மறுத்தான் மகாபலி சக்ரவர்த்தி.


மகாபலி தானம் கொடுப்பதைத் தடுக்க நினைத்த சுக்கிராச்சார்யர், ஒரு முடிவுக்கு வந்தார். மகாபலி யின் கமண்டலத்தில் இருந்து நீர் வரும் வழியை, ஒரு வண்டு உருவில் வந்து அடைத்துக் கொண் டார் சுக்கிராச்சார்யர். எனவே, மகாபலி யின் கமண்டலத்தில் இருந்து நீர், வாமனன் கையில் வந்து விழவில்லை. வாமனன், சாமான்யனா? ஒரு தர்ப்பைப் புல்லால் கமண்டலத்தின் துளையில் சரேலென்று குத்தினார். அந்தத் தர்ப்பைப் புல், வண் டின் ஒரு கண்ணை ஏகத்துக்கும் பாதிக்கச் செய்து விட்டது.


தனது தகாத செயலால் இப்படி ஆகி விட்டதே என்று வருந் திய சுக்கிராச்சார்யர், இழந்த பார்வையை மீண்டும் பெற இந்தத் தலத்துக்கு வந்து வண்டு வடிவில் ஒரு மண்டல காலம் தவம் இருந்தார். இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடினார். அப்போது, தான் சேகரித்து வைத்திருந்த தேன் துளிகளை எல்லாம், இந்தத் தீர்த்தத்தில் கலந்தாராம். அவரது தவத்துக்கு இரங்கிய எம்பெருமான், உளம் கனிந்து அவருக்குக் காட்சி தந்து பார்வையையும் கொடுத்து அருளினார். அன்று சுக்கிரனுக்குக் கொடுக்கப்பட்ட ஒளி, இப்போதும் தூண்டா விளக்காக (நேத்திர தீபம்) கருவறை அருகே, இரவும் பகலும் சுடர் விட்டுப் பிராகாசிக்கிறது. சுக்கிர பகவானுக்குப் பெருமாள் தந்த ஒளி, இன்றும் இந்த தீபத்தில் உயிர்ப்புடன் இருப்பதாக நம்பப்படுகிறது.


சுக்கிர பகவான் வணங்கியதால், இது சுக்கிரபுரி ஆயிற்று. சுக்கிரனுக்குத் தமிழில் வெள்ளி என்று பெயர். எனவே, இந்தத் திருத்தலம், 'திருவெள்ளியங் குடி'. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வைணவ நவக் கிரகத் தலங்களில், இது சுக்கிரனுக்கான திருக் கோயில் (இதர தலங்கள்: சூரியன்- சாரங்கபாணி திருக்கோயில், குடந்தை; சந்திரன்- ஸ்ரீநாதன் கோயில், நந்திபுர விண்ணகரம்; அங்காரகன்- திருநறையூர், நாச்சியார்கோவில்; புதன்- திருப்புள்ள பூதங்குடி; குரு- திருஆதனூர்; சனி- திருவிண்ணகர், ஒப்பிலியப்பன்கோயில்; ராகு- கபிஸ்தலம்; கேது- திருக்கூடலூர், ஆடு துறை பெருமாள்கோயில்). சுக்கிர தோஷம் உள்ளவர்களும், சுக்கிரனின் அருள் வேண்டு பவர்களும் இங்கு வந்து தரிசித்துச் சென்றால் நற்பலன்கள் விளையும்.


பார்க்கவ முனிவர் இந்தத் தலத்தில் நீண்ட காலம் தவம் இருந்ததால் பார்கவபுரி என்றும், தான் இழந்த சிருஷ்டி பதவியை இந்தத் தலத்தில் தவம் இருந்து மீண்டும் பிரம்மன் பெற்றதால் பிரம்மபுரி என்றும் அழைக்கப்படுவதுண்டு.


ஆலயத்துக்கான தீர்த்தங்கள் நான்கு. இந்திர தீர்த்தம், ஆலயத்தின் எதிரே

இருக்கிறது. பிரம்ம தீர்த்தம், ஆலயத்துக்கு மேற்கே இருக்கிறது. சுக்கிர தீர்த்தக் கிணறு ஆலயத்துக்கு வடக்கிலும், பராசர தீர்த்தக் கிணறு ஆலயத்துக்குத் தென் திசையிலும் விளங்குகின்றன.

இனி, ஆலய தரிசனம்.


கடந்த 2001-ல் மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றுள்ளது. கிழக்கு நோக்கிய பிரமாண்ட திருக்கோயில். மூன்று நிலை ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும், பலிபீடம்; கொடிமரம். கருடாழ்வார் சந்நிதி. சங்கு- சக்கரத்துடன் அருள் பாலிக்கும் அற்புதமான திருமேனி. இடக் காலை மடித்து, வலக் காலைக் குத்திட்டு அமர்ந்திருக்கும் வடிவம்.


இரண்டாம் பிராகாரத்தில் மரகதவல்லித் தாயார் மற்றும் ஆண்டாளின் சந்நிதிகள். மரகதவல்லித் தாயாரின் சந்நிதி விஸ்தார மானது. நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கும் பச்சைக்கல் வடிவம். அமர்ந்த நிலை. தவிர யோக நரசிம்மர், வரதராஜ பெருமாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், குலசேகர ஆழ்வார், ராமானுஜர், தேசிகர், விஷ்வக்சேனர் என்று பல மூலவர் மூர்த்தங்களைத் தரிசிக்கலாம் (ஆலயத்துக்கு வெளியே ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார்).


மூலவர் க்ஷீராப்திநாதரைத் தரிசிக்கச் செல்கிறோம். அத்தி மரத்தால் ஆன ஜய- விஜயரான துவாரபாலகர்களை வணங்கி உள்ளே செல்கிறோம். புஜங்க சயனத்தில் பெருமாளின் பிரமாண்டத் திருமேனி. சிலா விக்கிரத்தின் மேல் வர்ண கலாபம் பூசப்பட்டுள்ளது, அழகான திருக்கோலம். க்ஷீராப்திநாதரின் தலைமாட்டில் ஸ்ரீமார்க் கண்டேய மகரிஷியும், கால்மாட்டில் பூதேவியும் தரிசனம் தருகிறார்கள். இந்தப் பெருமாளைத்தான் 'கோலவில்லி ராமர்'

என்கிற பெயரில் மங்களாசாசனம் செய்தார் திருமங்கை ஆழ்வார். உற்சவர் கோலவில்லி ராமர் என்றும் சிருங்காரசுந்தரர் என்றும் அழைக்கப்படுகிறார்.


அநேக உற்ஸவங்கள் பிரமாதமாகவே நடந்து வருகின்றன. க்ஷீராப்திநாதரின் அருள்பெற்ற அன்பர்களின் உதவி கொண்டு, ஆலயம் சிறப்பாகவே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


பிரார்த்தனை முடிந்து ஆலயத்தில் இருந்து வெளியே திரும்பும்போது, நிறை வான தரிசனம் முடித்த திருப்தி எவருக்கும் நிச்சயம் இருக்கும்.


தலம்: திருவெள்ளியங்குடி

மூலவர்: க்ஷீராப்திநாதர்,
உற்ஸவர்: சிருங்கார சுந்தரர் கோலவில்லி ராமர்.
தாயார்: மரகதவல்லி தாயார்.


எங்கே இருக்கிறது?: கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையில் சோழபுரத்தில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து 6 கி.மீ. தொலைவு திருவெள்ளியங்குடி. சோழபுரத்தை அடுத்து வரும் திருப்பனந்தாளில் இறங்கிக் கொண்டாலும் இதே 6 கி.மீ. தொலைவுதான் திருவெள்ளியங்குடி.


கும்பகோணம்- ஆடுதுறை சாலையில் பயணித்தால், முட்டக்குடி என்கிற கிராமத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும்.


திருப்பனந்தாள்- ஆடுதுறை சாலையில் மையமாக திருவெள் ளியங்குடி இருக்கிறது. ஆடுதுறையில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது முட்டக்குடி. இங்கிருந்து ஆலயத்துக்கு சுமார் 3 கி.மீ.!


எப்படிப் போவது?: திருவெள்ளியங்குடிக்கு நேரடிப் பேருந்து வசதி அவ்வளவாக இல்லை. கும்பகோணத்தில் இருந்து புறப்படும் 2-ஆம் எண்ணுள்ள நகரப் பேருந்து தினமும் ஒரு சில டிரிப் மட்டுமே (அணக்குடி வழியாக) திருவெள்ளியங்குடி செல்லும். மற்ற நேரங்களில் கும்பகோணத்தில் இருந்து திருப்பனந்தாள் வரை செல்லும்.


மற்றபடி கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் பேருந்துகளில் பயணித்து, சோழபுரம் மற்றும் திருப்பனந்தாளில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் செல்வதுதான் வசதி.


தொடர்புக்கு: எஸ். ராமமூர்த்தி பட்டாச்சார்யர்

ஸ்ரீகோலவில்லி ராமர் ஆலயம், திருவெள்ளியங்குடி,
பாலாக்குடி அஞ்சல், திருமங்கலக்குடி (வழி)
தஞ்சாவூர் மாவட்டம்
பின்கோடு: 612 102.
போன்: 0435- 294 3152
மொபைல்: 94433 96212


படங்கள் மற்றும் தகவல் உதவி - திருமதி. பிரேமா ராமலிங்கம்


Wednesday, June 1, 2011

அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில்


ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில் முகப்புத் தோற்றம்..

மூலவர் : ஆண்டளக்கும் ஐயன்
உற்சவர் : ஸ்ரீரங்கநாதர்
தாயார் : பார்க்கவி
தல விருட்சம் : புன்னை, பாடலி
தீர்த்தம் : சூர்ய, சந்திர தீர்த்தம்
ஊர் : திருக்கண்ண மங்கை
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு

மங்களாசாஸனம்..

இடரான வாக்கை யிருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு
நாதனூ ராதரியார் நானெனதென்னார
மலன் ஆதனூர் எந்தை யடியார்.

-திருமங்கையாழ்வார்.

தலபெருமை:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,"ஸப்த புண்ய க்ஷேத்ரம்',"ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது.

திருவிழா:

சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நநடைபெறும்.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.படங்கள் மற்றும் தகவல் உதவி - திருமதி. பிரேமா ராமலிங்கம்

Monday, May 30, 2011

கந்தகிரி பழனியாண்டர் கோவில்..

நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் மேல் இந்தக்கோயில்  அமைந்துள்ளது. தெய்வத்திரு கிருபானந்த அடிகளார் இக்கோயிலுக்கு அடிக்கடி வருகை தருவார்.


படம் மற்றும் தகவல் உதவி - திரு.அருணையடி அவர்கள்.

Monday, May 16, 2011

அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில்,கோவில் பாளையம்

கோவை மாநகரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 15  கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவில் பாளையம் என்ற சிற்றூர் .பேருந்து நிலையத்தில் இருந்து சில நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில்.தொன்மை வாய்ந்த இந்த திருகோயில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது .மேலும் இங்குள்ள குருபகவான் இந்த கோயிலின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறார். ஆம் , இந்த தலம் அதி சிறப்பு வாய்ந்த குரு பரிகார ஸ்தலம் ஆகும். ஆளுயர குரு பகவான் சிலை கண்டதும் நம் மனதில் சொல்ல இயலாத அமைதியை ஏற்படுத்தும் .ஒவ்வொரு குரு பெயர்ச்சியும் இங்கு மிக சிறப்பாக கொண்டாடபடுகிறது.

இங்கு சூரியன் ,சந்திரன், குரு,சனீஸ்வரர் என தனி தனி சன்னதி அமைந்திருக்கிறது 


Saturday, April 23, 2011

வெள்ளியங்கிரி மலை ,சித்திரா பௌர்ணமி சிறப்பு புகைப்படங்கள்

வெள்ளியங்கிரி மலை ,சித்திரா பௌர்ணமி சிறப்பு புகைப்படங்கள் 
Sunday, April 10, 2011

திருவண்ணாமலை நிறைவு பகுதி (சில அரிய புகைப்படங்களுடன் )


மலையே சிவமாக போற்றப்படும் திருவண்ணாமலையில் ,கிரிவலபாதையில் அஷ்டலிங்கங்களும் பல்வேறு கோயில்களும் மடங்களும் புண்ணிய தீர்த்தங்களும் அமைந்து சிறப்புக்கு சிறப்பு சேர்த்து வருகிறது .கிரிவலபாதையில் பகவான் ரமண மகரிஷி ஆஷ்ரம் அனைவரும் தவறாது தரிசித்து வரும் ஆன்மீக சிறப்பு வாய்ந்த இடம் .முன்பதிவு செய்தவர்கள் அங்கு தங்கி  சேவை செய்யவும் அனுமதி உண்டு . சற்று நேரம் அங்கு அமர்ந்து தியானம் செய்து பகவானின் அருளாசிகளை உணரலாம் .அருகில் ரமண மகரிஷியை சிறுவயதில் ஆதரித்து அன்பு காட்டிய சேஷாத்ரி சுவாமிகள் ஆஷ்ரம் உள்ளது .மிக அமைதியான இடம் ஆன்ம திருப்தியை தரும் என்பது நிதர்சனம்.


கிரிவல பாதையில் அமைந்துள்ள யோகிராம் சுரத்குமார் ஆஷ்ரம் மற்றுமொரு பெரும் சிறப்பு வாய்ந்த இடம் .அழகிய கட்டிட வேலைப்பாடு கொண்ட இங்கு "யோகி ராம் சுரத்குமார்...யோகி ராம் சுரத்குமார்..." என்று ஓயாது பாடும் அவர் பக்தர்கள் குரல் நம் நெஞ்சை விட்டு நீங்க நீண்ட நேரம் பிடிக்கும் .


கிரிவலபாதை மட்டுமின்றி மலை மீதும் பல விஷேச கோயில்கள் இடங்கள் உள்ளது. குறிப்பிடத்தக்க இடங்கள் விருப்பாஷி குகை ,மற்றும் ஸ்கந்தாஷ்ரம் 
ஓம் அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா!
ஓம் அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா!!Blog Archive

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Coupons