கொழும்பு இந்துக்கல்லூரியில் கோயில் கொண்ட கற்பக விநாயகர். இரத்மலானை, இலங்கை.


இலங்கைத் தலைநகரான கொழும்பில் அமைந்துள்ள இரத்மலானைப் பதியில் இயங்கிவரும் கொழும்பு இந்துக்கல்லூரியில் கற்பக விநாயகருக்குச் சிறப்பான ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் இரண்டாவது கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தேறியுள்ளது. வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள விநாயகராலயம் எழிலோடு திகழ்வது கல்லூரிக்குப் புனிதத்தையும் ஆன்மீகச் சிறப்பையும் வழங்குகின்றது. மாணவர்களுக்கும் சுற்றாடலில் வாழும் மக்களுக்கும் வழிபாட்டிடமாக மிளிரும் இவ்வாலயம் கல்லூரியில் அமைந்த வரலாற்றை இங்கு பதிவு செய்ய விளைகின்றோம்.

இந்துவித்தியாவிருத்திச் சங்கத்தினர் கொழும்பு இந்துக்கல்லூரியை நிறுவ முனைந்த வேளையிலேயே கல்லூரி வளாகத்தில் ஆலயமொன்றை அமைக்கும் எண்ணத்தையுங் கொண்டிருந்தனர். ஆன்மீகச் சூழலில் மாணவர்கள் கல்வி பெறவும் சமய அனுட்டானங்களையும் வழிபாட்டு முறைகளையும் பழகிக் கொள்ளவும் ஆலயமொன்று அவசியமென அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால் அன்றைய சூழ்நிலைகள் அவர்களுக்கு ஆலயமொன்றினை அமைக்கும் வாய்ப்பினை தரவில்லை. 1983இன் இனக்கலவரங்களைத் தெடர்ந்து இடம்பெயர்ந்த கல்லூரி மீண்டும் இரத்மலானையில் இயங்கத் தொடங்கிய வேளையில் கல்லூரி வளாகத்தில் ஆலயமமைக்கும் எண்ணம் தீவிரம் பெறலாயிற்று. கல்லூரியின் ஸ்தாபகர்கள் இனங்கண்ட காரணங்களும் விடுதி மாணவர்களுக்கும் மொறட்டுவ பிரதேச இந்து மக்களுக்குமிருந்த வழிபாட்டிடமொன்றிற்கான தேவையும் விக்கினங்கள் இன்றி கல்லூரி சிறப்பாகச செயற்பட கல்லூரியில் கோயில் கொள்ளும் விநாயகர் காவலாய், கற்பகதருவாய் அமைவாரென்ற நம்பிக்கையும் கோயிலமைக்கும் பணிகளை விரைவுபடுத்தின.

சிவபூமி எனத் திருமூலரால் வர்ணிக்கப்பட்ட இலங்கையின் இரத்மலானைப் பதியும் மிகத்தொன்மையான காலத்திலேயே சைவமும், தமிழும் தவழ்ந்த இடமாகத் திகழ்ந்தது. புராண காலமான இராவணன் இலங்கையை ஆண்ட காலத்தில் சிவாலயமொன்றை இரத்மலானைப் பகுதியில் ஸ்தாபித்துச் சிவப்புமலர் கொண்டு சிவனை அர்ச்சித்ததாகவும் அதனால் அப்பகுதியில் சிவப்பு மலர்த்தோட்டங்கள் நிறைந்திருந்ததாகவும் எனவே அப்பகுதி "சிவப்பு மலர்" என்று பொருள்பட அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிவப்புமலர் என்பது சிங்கள மொழியில் "ரத்துமல்" என அழைக்கப்படும். இவ்வாறு அழைக்கப்பட்ட அப்பிரதேசம் பின்னர் மருவி "ரத்மலான" என்றாகியதாக சொல்லப்படுகிறது. எனினும் இப்பகுதியில் சைவமும் தமிழும் தழைத்திருந்தமைக்கு இலக்கிய, தொல்லியல் சான்றுகளுமுள்ளன. கி.பி 1415 - 1467வரை கோட்டேயைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த 6ஆம் பராக்கிரமபாகு மன்னர் காலத்தில் வணக்கத்திற்குரிய ஸ்ரீராகுலதேரர் என்னும் பௌத்த மதத்துறவியால் எழுதப்பட்ட "சலலீஹினி சந்தேச" என்ற சிங்கள இலக்கிய நூலில் இரத்மலானையில் ஆலயம் ஒன்று இருந்தமைபற்றியும் தமிழில் தோத்திரங்கள் பாடப்பட்டமை பற்றியும் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் கி.பி 1415 - 1467 காலப்பகுதியில் இரத்மலானைப் பகுதியில் இந்துத் தமிழர்கள் சிறப்போடு வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இக்கோயிற் பகுதியில் 1997யூன் 2ஆம் திகதி நிலத்தைத் தோண்டிய போது கிடைத்த பார்வதி விக்கிரகத்தை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தி அவ்விக்கிரகம் கி.பி 11, 12ஆம் நூற்றாண்டுகளுக்குரியதாக ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். அதாவது பொலநறுவை யுகத்திற்கு முற்பட்ட காலத்திலேயே அவ்வாலயமும் தமிழ்மக்களும் இரத்மலானைப் பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர் என்பது உறுதியாகிறது. இவ்வாலயம்; 1519 ஆகஸ்ட் மாதத்தில் போர்த்துகேயர் படையெடுப்பால் அழிக்கப்பட்டது. எனினும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கோயிலிருந்த இடத்தில் 1717இல் கதிர்காம முருகன் கோயிலின் நிர்வாகத்தின் கீழ் சிறிய முருகன் கோவில் ஒன்று கட்டப்பட்டது என அறியப்படுகின்றது. இன்றும் இக்கோயில் இருந்த இடத்தில் (கோணா கோவில்) சிறியளவில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. எனினும் சுமார் 7000ஏக்கர் காணிக்கு உரியதாக இருந்த அக்கோயில் இன்று வெறும் 2 ஏக்கர் காணிக்கே உரியதாக இருக்கிறது. (நன்றி என்.கே. எஸ். திருச்செல்வம்) 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் வரை இரத்மலானைப் பகுதியில் இந்துத்தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இரத்மலானை, கொழும்பு இந்துக்கல்லூரி அமைக்கப்பட்ட சூழல் அன்று இந்துச் சதுக்கம்(HINDU SQUARE)என்றே அழைக்கப்பட்டு வந்தது. இவ்வாறான இந்து தமிழ்ப்பிரதேசமாகவிருந்த தொன்மைமிக்க இடத்தில் மீண்டும் அமையும் ஆலயம் என்றவகையில் கற்பக விநாயகராலயம் முக்கியத்துவம் பெறுகின்றது.

இரத்மலானை கொழும்பு இந்துக்கல்லூரியின் அதிபராக மீண்டும் திரு. ந. மன்மதராஜன் அவர்கள் 1995 இல் பதவியேற்றத்தைத் தொடர்ந்து ஆலயமமைக்கும் பணியில் அவர் மிகுந்த ஈடுபாட்டோடு செயற்பட்டார். அதன்பயனாக ஆலயத்திருப்பணிகள் ஆரம்பமாகின. 1996ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாளில் அதாவது ஸ்ரீயுவ வருடம் தைமாதம் 21ஆம் நாள் (04-02-1996) பௌர்ணமித்திதியும் பூச நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுப நாளில் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது. இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் தலைவர் சுவாமி ஸ்ரீஆத்மகணானந்தஜி அவர்களாலும் அப்போதய கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் உயர்திரு சி.வி. விக்னேஸ்வரன் அவர்களாலும் ஆலயத்திற்கான அடிக்கற்கள் நாட்டிவைக்கப்பட்டன. நல்நெஞ்சமுள்ள புரவலர்களின் நிதியுதவியினாலும் ஆதரவினாலும் முதலில் மூலக்கோயில் (மூலஸ்தானம்) அமைக்கப்பட்டது. சிறியளவிலான அவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் பிரமாதி வருஷம் ஆனிமாதம் 17ஆம் நாள் (01 -07-1999)திருவோண நட்சத்திரமும் சித்தயோகமும் திருதியைத் திதியும் கூடிய காலை 10மணி 2நிமிடம் மதல் 11 மணி 14 நிமிடம் வரையான சுபவேளையில் நடைபெற்றது. இதுவே ஆலயத்தின் முதலாவது (நூதனப் பிரதிஷ்டா) மகாகும்பாபிஷேகம் ஆகும். பிரதிஷ்டா கலாநிதி சிவஸ்ரீ. சி. குஞ்சிதபாதக்குருக்கள் (கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான பிரதமகுருக்கள்) தலைமையிலான சிவாச்சாரியர்கள் கும்பாபிஸேகத்தைச் சிறப்பாக நடாத்தினார்கள். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேகமும் மண்டலாபிஷேகப் பூர்த்தி சங்காபிஷேகமும் சிறந்த முறையில் நடந்தேறின.

சிறியளவிலான ஆலயம் அமைக்கப்பட்ட போதிலும் கல்லூரியைச் சார்ந்தோருக்கு அது திருப்தி தருவதாக அமையவில்லை. பிரகாரக்கோயில்களைக் கொண்ட முழுமையானதொரு ஆலயமாக கற்பக விநாயகராலயத்தை விருத்திசெய்ய வேண்டும் என விரும்பினார்கள். கடுமையாக முயற்சித்தார்கள். விநாயகப்பெருமான் கருணைகூர்ந்தார். சைவாபிமானிகளும் நல்நெஞ்சம் கொண்டபுரவலர்களும் பேராதரவு நல்கினர். இவையனைத்தினதும் கூட்டு விளைவே இன்று தலைநிமிர்ந்துள்ள கற்பக விநாயகராலயம் என்பது மிகையல்ல. வேறெந்த பாடசாலைகளிலும் இல்லாத வகையில் பெரியளவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

கோயிலின் ஆதிமூலத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளியுள்ளார். "கற்பகம்" என்பது சொர்க்கலோகத்தில் இருக்கும் ஒரு மரமெனக் கூறப்படுகின்றது. இது கேட்பது எல்லாவற்றையும் கொடுக்கக்கூடியது. அவ்வகையில் கற்பக விநாயகரும் கேட்டதெல்லாவற்றையும் கொடுக்கக் கூடியவர் என்று பொருள்படுகின்றார். எனவே மாணவர்களுக்கும், அடியார்களுக்கும் கேட்டவரமெல்லாம் நல்கும் தெய்வமாக கற்பகவிநாயகர் உறைகின்றார். உட்பிரகாரத்தில் செல்வத்திருமகளாம் இலக்குமிக்கு தென்மேற்கு மூலையில் கோயிலமைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள கோயிலில் வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர் வீற்றிருக்கின்றார். வடக்குப் பிரகாரத்தில் துர்க்ககையம்மாளுக்கும் நவக்கிரகங்களுக்கும் தனித்தனியே கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மூலையில் காவற் தெய்வமான வைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். ஆலயத்தில் மூஷிக பலிபீடத்திற்கு முன்னால் தெற்குநோக்கி நடராஜர் பஞ்சகிருத்திய தாரியாய் கோயில் கொண்டுள்ளார். அடியார்கள் தம் இஷ்ட தெய்வங்களையெல்லாம் ஒருங்கே வழிபடக்மூடியதாக ஆலயம் அமைந்துள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

ஆலயத்தின் உட்புறத்தே முன்னே விநாயகரைத் தொழும் பாவனையில் சமயகுரவர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு பிரகார உட்சுவரில் விநாயகப்பெருமானின் பதினாறு திவ்ய தோற்றங்களைக் காட்டும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஆலயத்திற்கு அழகையும், புது மெருகையும் தருவது மட்டுமன்றி மாணவர்களுக்கும், அடியார்களுக்கும் ஆன்மீக அறிவையும் புது அனுபவத்தையும் ஏற்படுத்துவனவாக உள்ளன. இவ்வாறாக பலவகைகளிலும் முக்கியத்துவம் பெறும் இவ் கற்பக விநாயகர் எம்மையும், கல்லூரியையும்; நிச்சயம் மேன்மைப்படுத்துவார்.

"வேழமுகத்து விநாயகனைத்தொழ வாழ்வு மிகுத்து வரும்"

No comments

Powered by Blogger.