இந்த வலைப் பூவில் உங்கள் ஊரில் உள்ள ஆலயங்கள் பற்றிய தகவல்களை உங்கள் பெயரிலேயே வெளியிட ஆலய புகைப்படத்துடன் விபரங்களை அனுப்பலாம் aalayankal@gmail.com

Monday, December 20, 2010

ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம், திருநிலை கிராமம்,காஞ்சிபுரம் மாவட்டம்

                                               அன்பர்களை  காக்க  வந்த  பெரியாண்டவர்
        ஸ்ரீ  பெரியாண்டவர்  ஆலயம் திருநிலை கிராமம் , ஓரகடம்  போஸ்ட்  திருக்கழுகுன்றம்  வழி , செங்கல்பட்டு வட்டம் ,காஞ்சிபுரம்  மாவட்டம் .pin-603109,ஆலய தொடர்புக்கு --- 
 9842740957

சுயம்புலிங்கம் மூலவர் 

பெரியாண்டவர் ஆலயம் திருநிலை
தொண்டை மண்டலம் என்று  அழைக்கப்படும்  காஞ்சீபுரம்  மாவட்டத்தில் உள்ள திருகழுக்குன்றத்தில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில்  இயற்கை  அன்னை  இயல்பாக அமர்ந்து வசிகரிக்கும்  மாட்சிமை  பொருந்திய திருநிலை கிராமத்தில் பெரியாண்டவர் சிவன் ஆலயம் அமைந்துள்ளது . ,மலை மற்றும் காடுகளாலும்   வயல் வெளியில்  சூழபட்டு    இருந்த சிவலிங்கத்திற்கு  பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சிவலிங்கத்தை  ஈசன்  பன்றி உரு கொண்டு அடர்ந்த  புதரினால்  மூடபட்டு இருந்த   இடத்தை  அடையலாம்  காட்டி  மறைந்ததாக  கூறும்   அந்த ஆலயத்தின் வரலாறு என்ன?

அசுரர்களை அழிக்க மனித  அவதாரம்  ஈசன்  எடுத்தால்  மட்டுமே  அழிக்கமுடியும் என்ற சுழலில்  ஒரு முறை பார்வதி தேவி  ஈசனின்  அவதாரம் வேண்டி  ஒரு நாழிகை  மனிதனாக பிறப்பாய் என்று    பார்வதி தேவி  கொடுத்த சாபத்தின் காரணமாக சிவபெருமான் பூமியில் மானிடனாக அவதரிக்க வேண்டி இருந்தது. அவர் பூமிக்கு வந்து தன் நிலை மறந்து அங்கும் இங்குமாக திகம்பரநிலையில் மூவேழு  உலகமும் அலைந்து திரிந்து கொண்டு இருந்தார். அவர் அந்த நிலையில் இருந்ததினால் அனைத்து இயக்கங்களும் தடைப்பட்டன. தேவர்கள் கவலை அடைந்தனர். அவர்கள் பார்வதியிடம் சென்று  ஈசனை  ஆட்கொள்ளுமாறு  வேண்டிக்கொள்ள பார்வதி தேவியும்    சுற்றி அலைந்து கொண்டு இருந்த சிவபெருமானின் நிலையைக் கண்டு மனம் வருந்தினாள். ஆனாலும் சாப விமோசனம் குறிப்பிட்ட காலத்தில்தானே நடக்க முடியும். உமையவள்  அங்காலபரமேஸ்வரியாக   அவதாரம் கொண்டு தன் கையில் இருந்த சூலாயுதத்தை  கீழே வீசி எரிய அந்த சூலாயுத ஜோதி ஒளியை  கண்டு ஈசன்  கிழே  இறங்கி  வந்து  தன் பாதத்தை  ஒருநிலையில்  திருநிலை யாய்  பதிக்க    உமையவள்  அங்காலபரமேஸ்வரி அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். ஒரு நாழிகை நேரமும் முடிய மனிதனாய் வந்தவர் சிவமாய் உறுமாறி தோன்றினார். மேலும் பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிரே இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர் என உமையவள் கூறினாள். இவ்வார்தையை கேட்ட தேவர் முதலானோர் பெரியாண்டவா பெரியாண்டவா எனக் கூறி அழைத்து அவர் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். 
.அந்த இடத்திலேயே தான் சிவலிங்கமாக நிலைக் கொள்ள அந்த இடத்தின் பெயர் திருநிலை என ஆயிற்று. சூலாயுதம் விழுந்த இடத்தில் முதலில் ஜோதி வடிவமாகக் காட்சி தந்தார். அதன் பின்னரே லிங்க வடிவம் பெற்று சுயம்பு  லிங்க உருவில் அங்கு அமர்ந்தார். மனித  வடிவில்  உலகை  வளம்  வந்தபோது   அவரை  சுற்றி   இருபத்தி ஒரு சிவ கணங்களும் அவருக்குப் பாதுகாப்பாக எவர் கண்களிலும் படாமல் மறைந்த நிலையில் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தனர். அதை குறிக்கும் வகையில்தான் அங்கு இருபத்தி ஒரு சிவலிங்கங்கள் உள்ளனவாம். அவை எப்படி ஏற்பட்டது என்றால் அங்காலபரமேஸ்வரி தேவியின்  கையில்    இருந்த சூலாயுதம் பூமியின்மேல்  கீழே விழுந்தபோது அந்த இடத்தில் இருந்த மண்ணில் மறைந்தவாறு ஈசனை பாதுகாத்து வந்து கொண்டு இருந்த சிவ கணங்கள் இருபத்தி ஒரு மண்கட்டிகளாக தெறித்து சூலாயுதத்தை சுற்றி விழ அவை சிவன் பதம்  பூமியின்மேல் பதித்த உடன்  மீண்டும்  இருபத்தி ஒருசிவகணங்கலாக தோன்றி  அதிசயமாக அருளின  . அது மட்டும் அல்ல அவரைத் தொடர்ந்து அவருக்குக் காவலாக மனித உருவிலேயே நந்தியும் வந்து கொண்டு இருந்தாராம். ஆகவே சிவன் நிலையாக நின்ற இடத்தில் நந்தி தேவரும் அதே மனித உருவில் நின்று விட்டதினால்தான் நந்தி தேவர் நின்ற நிலையில் மனித கோலத்தில் அந்த ஆலயத்தில் காட்சி தருகிறார். ஆலயத்தின் இன்னொரு விசேஷம் என்ன என்றால் அங்கு சிவபெருமானின் சன்னதிக்குப் பக்கத்தில் பார்வதி தேவி அங்காள பரமேஸ்வரியாக இருந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். அவள் பெயர் அங்கு திருநிலை நாயகியாம். அமர்ந்த நிலையில் அவள் காட்சி தருகிறாள். அந்த ஆலயத்துக்கு அருகில் உள்ள சித்தமிர்த   புனிதக் குளத்தில் குளித்துவிட்டு ஆறு வாரங்கள் பெரியாண்டவர் மற்றும் அங்காள பரமேஸ்வரி சன்னதிக்குச் சென்று பூஜை செய்து வணங்கி வந்தால் நடக்காத காரியங்கள் கூட நடைபெறுமாம். குழந்தைபேறு பெற இங்கு வந்து வணங்குவது விசேஷமாகக் கருதப் படுகின்றது. மேலும் அந்த இடத்துக்கு பல முனிவர்களும் ரிஷிகளும் வந்து சிவனை வணங்கிச் சென்று உள்ளனர். அந்த இருபத்தி ஒன்று சிவ லிங்கங்களும் சிவ பெருமானான மூல லிங்கமான பெரியாண்டவரை அங்கு வணங்கி பூஜிப்பதான ஜதீகமும் உள்ளது. சிவபெருமான் மனித உருவில் வந்ததினால் அவர் காலடி நேரடியாகப் பட்ட தலம் இது.  இன்றும் பலஆயிரம் ஆயிரம்  குலதெய்வமாக  கொண்ட குடும்பங்கள்   இருபத்தி  ஓர் மண் உருண்டைகள்  செய்து  லிங்கத்தை சுற்றி   வைத்து வணங்கி  செல்வதை காணலாம் . இங்கு விநாயகரும் மனித வடிவில்  இரு கைகளுடன் நின்ற கோலத்தில் அருள் வதையும்  அவருக்கு  திருநீற்றால்  மட்டுமே  அபிஷேகம்  நடைபெருவதும் அவற்றை  உட்கொண்டு  பூசுவதால்   நோய் விலகி  செல்வம் ,கல்வி  அறிவு கிடைப்பதாக பக்தர்கள்  கூறுவதை காணலாம் .நாமும் பெரியாண்டவர் ஆலயம்  செல்வோம்  வளம் பல பெறுவோம்


மேலும் விபரங்களுக்கு 
............................................................................................................
ஜீவிதா .E
நெம்மேலி கிராமம் &போஸ்ட் ,
பஞ்சாயத்து ஆபிஸ்  ரோடு
செங்கல்பட்டு  வழி ,
காஞ்சிபுரம் மாவட்டம் ,
பின்-- 603109 
செல்-- 
 9940114520
.............................................................................................................................
 Monday, November 8, 2010

ஈழத்துச் சிதம்பரம்...

ஈழத்துச் சிதம்பரம் ஆலய முகப்புத் தோற்றம்..ஈழத்துச் சிதம்பரம் என சிறப்பிக்கப்படும் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடமேற்கே 10மைல் தொலைவில் உள்ள காரைநகரிலே திண்ணபுரம் பிரிவிலே அமைந்துள்ளது.

ஈழத்துச் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள மூலவரை சுந்தரேஸ்வரர் (சிவன்) என்றும் அம்பிகையை சௌந்தராம்பிகை என்றும் அழைப்பர்.

இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள்...

திருவெம்பாவை
பங்குனி உத்தரத்தில்
ஆடிப்பூரத்தில்
தைப்பூசம்
மாசி மகம்
ஆவணி சதுர்த்தி
நவராத்திரி
கார்த்திகைத் தீபம்

தேர் திருவிழா ஒன்றின் போது ஸ்ரீ சுந்தரேஸ்வரர் தேரில் பவனி வரும் காட்சி...ஆலயத்தின் தனிச்சிறப்பு...

சிதம்பரத்திலே நடைபெறுவது போன்றே பெரும்பாலும் உற்சவங்கள் திண்ணபுரம் சிவன் கோயிலில் நடைபெறுவதால் அது ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்பட்டு வருகின்றது.

Sunday, October 31, 2010

பாபாஜி கோயில், படப்பை


சென்னை தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் மலைபட்டு என்னும் சிறு கிராமத்தின் அருகே மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இக்கோயில்.இயற்கை எழில் சூழ்ந்த மிக அமைதியான மலையடிவாரத்தில் தனியாரால் கட்டப்பட்டது . தியானம் செய்யும் அன்பர்கள் இந்த இடத்தை மிகவும் நேசிப்பார்கள் என்பது உறுதி .பல பிரபலங்கள் வந்து செல்லும் இடமானாலும் அமைதி மாறாமல் இருப்பதும் ,மேலும் மகாவதார் பாபாஜியின் அன்பையும் ,ஆசிர்வாதங்களையும்  இங்கு தியானத்தில் உணரமுடிவதும்  சிறப்பு .

Saturday, October 16, 2010

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம், வடமராட்சி, துன்னாலை - இலங்கை.

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய முகப்புத் தோற்றம்..

வடமராட்சியில் துன்னாலை என்னும் இடத்தில் இருக்கும் வல்லிபுர ஆழ்வார் என்ற விஷ்ணுகோவில் இலங்கை மக்கள் அனைவரிடமும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற பெருமை உடையது.

ஸ்ரீ வல்லிவுர ஆழ்வார் கோவிலின் மூலஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் வைத்தே பூஜைகள் நடைபெறுகின்றது.

இந்தக் கோவிலின் ராஜ கோபுரத்தில் மகாத்மா காந்தியின் சிலையும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


உற்சவம் ஒன்றின் போது..புரட்டாதி பூரணை தினத்தன்று வங்காளவிரிகுடாவில் சக்கரத்தாழ்வார், ஆஞ்சனேயர் சகிதம் தீர்த்தமாட செல்லும் காட்சி மிகவும் ரம்யமாக இருக்கும்.

இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள்...

மகோற்சபம்
கிருஷ்ண ஜெயந்தி
தீபாவளி


ஆலயத்தின் தனிச்சிறப்பு..

இந்த ஆலயத்தில் விபூதியும், திருநாமமும் பிரசாதமாக வழங்கப் படுகிறது.

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், திருகோணமலை, இலங்கை

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய முகப்புத் தோற்றம்..


11ம் நூற்றாண்டிலேயே இந்த ஆலயம் சிறப்புற்று விளங்கியமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சரித்திரப் பேராசிரியர் திரு.செ.குணசிங்கம் அவர்களின் நூலக் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது.

இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள்...

மகோற்சபம்
வைகாசிப் பொங்கல்
நவராத்திரி
கும்பவிழா
கேதாரகௌரி விரதம்


உற்சவம் ஒன்றின் போது..

பங்குனி உத்தரத்தைத் தீர்த்தோற்சப தினமாகக்கொண்டு பத்துநாட்கள் மகோற்சபம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் இரதோற்சபம் நடைபெறுவதோடு, பங்குனி உத்தரத்தன்று அம்பாள் கோணேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் கோணமலையின் அடிவாரத்திலுள்ள கடற்கரையில் அதிகாலையில் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.

Monday, September 27, 2010

சித்தர் போகர் ஜீவசமாதி - பழனிபழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருகோயிலின் உள்ளே தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது சித்தர் போகரின்  ஜீவசமாதி.திருநந்தி தேவரே பல்வகை பிறப்புற்று பின் போகராக தோன்றினார் என்பர்.இவரது காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு.தனது சீடர் புலிப்பாணி சித்தருடன் பழனி மலையில் மேல் தான் அமைத்த திருக்கோயிலின் கண் நவபாஷான கட்டினால் தண்டாயுதபாணி சுவாமியின் அருள் திருமேனியை நிறுவினார்.ஆண்டவன் வலக்கரத்தில் உள்ள தண்டம் ஞானத்தின் சின்னமாக கருதபடுகிறது. இதுவே போகர் ஜீவ சமாதி அடைந்த இடம். இங்கு இன்றும் போகர் வழிபட்ட அருள்மிகு புவனேஸ்வரி அம்மை, மரகதலிங்கம் , வலம்புரி சங்கு ஆகியவற்றை காணலாம். இச்சன்னதியில் இருந்து தண்டாயுதபாணி திருவடி நிலைக்கு ஒரு சுரங்க பாதை உள்ளது. கடைசியாக இதன் வழியாக சென்ற போகர் திரும்பாமல் இதனுள்  அமர்ந்துவிட்டார் என்பர் .அவருக்கு பின் அவரது சீடர் புலிப்பாணி சித்தர் அவரது பணிகளை தொடர்ந்து அங்கு செய்து வந்தார் .அவரது ஜீவ சமாதி பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. புலிப்பாணி ஆஸ்ரம் என்று இன்றும் அந்த இடம்  அவரது கருவழி பரம்பரையினர் வழிபட்டு வரப்படுகிறது .மேலும் புலிப்பாணி பரம்பரையினர் தான் இன்றும் பழனி மலையின் மேல் அமைந்துள்ள போகர் சமாதியில் பூஜைகள் செய்து வருகின்றனர் .

Friday, September 24, 2010

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அவதார திருத்தலம்- புவனகிரி


புவனகிரி - சிதம்பரத்துக்கு அருகில் அமைந்துள்ள சிற்றூர் .இங்கு தான்  மந்திராலய மகான் பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அவதரித்ததாக நம்பபடுகிறது. இதை தமிழக அரசாங்கமும் ஆராய்ந்து முறைப்படி சுவாமிகள் புவனகிரி பட்டி சந்தில் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் தான் பிறந்தார் என அறிவித்து அதற்க்கு சான்று அளித்துள்ளது . சுவாமிகள் அவதரித்த வீட்டை 1989 - ல் முறைப்படி கோயிலாக கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இன்று வரை தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. மீண்டும் கடந்த  25.06.2008 - ல் மஹா கும்பாபிஷேகம் முறையாக நடத்தப்பட்டது .


வருடம் தோறும் ஆவணி மாதம் சுவாமிகள் பிறந்த நாள் ஆராதனை சிறப்பாக கொண்டாடபடுகிறது .நவராத்திரி விழ பத்து தினங்களுக்கு கொண்டாடபடுகிறது.
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி,ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி,ஸ்ரீ ராம நவமி போன்ற வைபவ விழாக்களும் நடை பெறுகின்றன .


தினசரி கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.30 மணி முதல் 11.30 வரை - மாலை 4.00 மணி முதல் 8.00 வரை.

Sunday, August 22, 2010

பேரூர் பட்டீஸ்வரர்

பழைய படம் 
சுமார் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருத்தலம் திருப்பேரூர் (இன்றைய  பேரூர்).கரிகால் சோழன் , நாயக்க மன்னர்கள் ,சேர ,சோழ ,பாண்டிய மன்னர்கள் ,மைசூர் மன்னர்கள் ,விஜயநகர அரசர்கள் வணங்கிய தலம் இது.பிரம்மா,திருமால், அதி உக்ரகாளி ,நந்தி,சுந்தரர் ஆகியோருக்காக நடராஜர் சிதம்பரத்தில் ஆடியது போல ஆனந்த நடனம் புரிந்ததும் , அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தண்டபாணி உள்ளதும், காமதேனு முக்தியடைந்ததும் ,எப்போதும் நாராயணனை வணங்கிய  நாரதர் வழிபட்ட சிவன் இருப்பதும் ,பட்டிபுரி, ஆதிபுரி , ஞானபுரி,மேலைசிதம்பரம் என்றெல்லாம் அழைக்கப்படும் பெருமை வாய்ந்த கோயில் இது.
                                  சோழ அரசனால் அமைக்கப்பட்ட கருவறையில் இறைவன் லிங்கவடிவில் பட்டீஸ்வரன் என்ற நாமத்துடன் தரிசனம் தருகின்றார் . பச்சைநாயகி அம்மன் தன் சன்னதியில் பத்ம பீடத்தில் நின்ற நிலையில் வலது கையில் நீலோத்பவ மலருடன் ,இடக்கை டோல ஹஸ்தமாக அருள் வழங்கும் கண்களுடன் காட்சி அளிக்கின்றார்.
                                       தல விருட்சம் பன்னீர்மரம் (சித்தேச மரம் ) மூலவருக்கு பின்னாலேயே அமைந்துள்ளது .காமதேனுவின் கொம்பினால் குத்தி உருவாக்கப்பட்ட தீர்த்தம் சிருங்கக்கிணறு மூலவருக்கு இடதுபுறம் முன்னால் அமைந்துள்ளது .கொடிமரத்திற்கு முன்ன்னல் நின்று வெள்ளை கோபுரம் வழியே பார்த்தால் பட்டீஸ்வரர் கருவறை விமானம் தெரிகிறது.இது போன்ற அமைப்பு மதுரை மற்றும் சில தளங்களிலே யே உள்ளதாகும் .
                                   திருவிழாக்கள்    பங்குனி உத்திரத்தில் கொடியேற்றத்துடன் நடத்தப்படும் பிரம்மமோற்சவம் தவிர திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக கொண்டாட  படுகின்றது . இங்கு மட்டுமே மிகசிறப்பாக ஆணி மாதம் கிருத்திகை தொடங்கி 9 நாட்கள் நாற்று நாடும் விழா நடைபெறும் . விழாவின் 10 வது நாளில் சிவபெருமான் நாற்று நாடும் காட்சியோடு விழா நிறைவுபெறும் .
                                                             பூஜைகள்   காலை 5.30 மணி முதல்  1 மணி வரையும் மீண்டும்  4 மணி முதல் இரவு  9  மணி வரையும் நடை திறக்கபட்டிருக்கும் .கோபூஜை ,கஜபூஜை தவிர தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றது .கிருத்திகை தோறும்  கடந்த 34 ஆண்டுகளாக 108விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றுவருகிறது .தற்போது பிரதிவாரம் வெள்ளிகிழமைகளில் திருவிளக்கு வழிபாடு நடை பெறுகின்றது .
தற்போதைய படம்
வரும்        நவம்பர்     மாதம்       12 - ம் தேதி கும்பாபிஷேகம் காண இருக்கும் இத்திருக்கோயிலில் பிறவா வரம் தரும் சிவபெருமானை வழிபட்டு அருள்பெறுவோம் !

Saturday, August 7, 2010

கொழும்பு இந்துக்கல்லூரியில் கோயில் கொண்ட கற்பக விநாயகர். இரத்மலானை, இலங்கை.


இலங்கைத் தலைநகரான கொழும்பில் அமைந்துள்ள இரத்மலானைப் பதியில் இயங்கிவரும் கொழும்பு இந்துக்கல்லூரியில் கற்பக விநாயகருக்குச் சிறப்பான ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் இரண்டாவது கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தேறியுள்ளது. வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள விநாயகராலயம் எழிலோடு திகழ்வது கல்லூரிக்குப் புனிதத்தையும் ஆன்மீகச் சிறப்பையும் வழங்குகின்றது. மாணவர்களுக்கும் சுற்றாடலில் வாழும் மக்களுக்கும் வழிபாட்டிடமாக மிளிரும் இவ்வாலயம் கல்லூரியில் அமைந்த வரலாற்றை இங்கு பதிவு செய்ய விளைகின்றோம்.

இந்துவித்தியாவிருத்திச் சங்கத்தினர் கொழும்பு இந்துக்கல்லூரியை நிறுவ முனைந்த வேளையிலேயே கல்லூரி வளாகத்தில் ஆலயமொன்றை அமைக்கும் எண்ணத்தையுங் கொண்டிருந்தனர். ஆன்மீகச் சூழலில் மாணவர்கள் கல்வி பெறவும் சமய அனுட்டானங்களையும் வழிபாட்டு முறைகளையும் பழகிக் கொள்ளவும் ஆலயமொன்று அவசியமென அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால் அன்றைய சூழ்நிலைகள் அவர்களுக்கு ஆலயமொன்றினை அமைக்கும் வாய்ப்பினை தரவில்லை. 1983இன் இனக்கலவரங்களைத் தெடர்ந்து இடம்பெயர்ந்த கல்லூரி மீண்டும் இரத்மலானையில் இயங்கத் தொடங்கிய வேளையில் கல்லூரி வளாகத்தில் ஆலயமமைக்கும் எண்ணம் தீவிரம் பெறலாயிற்று. கல்லூரியின் ஸ்தாபகர்கள் இனங்கண்ட காரணங்களும் விடுதி மாணவர்களுக்கும் மொறட்டுவ பிரதேச இந்து மக்களுக்குமிருந்த வழிபாட்டிடமொன்றிற்கான தேவையும் விக்கினங்கள் இன்றி கல்லூரி சிறப்பாகச செயற்பட கல்லூரியில் கோயில் கொள்ளும் விநாயகர் காவலாய், கற்பகதருவாய் அமைவாரென்ற நம்பிக்கையும் கோயிலமைக்கும் பணிகளை விரைவுபடுத்தின.

சிவபூமி எனத் திருமூலரால் வர்ணிக்கப்பட்ட இலங்கையின் இரத்மலானைப் பதியும் மிகத்தொன்மையான காலத்திலேயே சைவமும், தமிழும் தவழ்ந்த இடமாகத் திகழ்ந்தது. புராண காலமான இராவணன் இலங்கையை ஆண்ட காலத்தில் சிவாலயமொன்றை இரத்மலானைப் பகுதியில் ஸ்தாபித்துச் சிவப்புமலர் கொண்டு சிவனை அர்ச்சித்ததாகவும் அதனால் அப்பகுதியில் சிவப்பு மலர்த்தோட்டங்கள் நிறைந்திருந்ததாகவும் எனவே அப்பகுதி "சிவப்பு மலர்" என்று பொருள்பட அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிவப்புமலர் என்பது சிங்கள மொழியில் "ரத்துமல்" என அழைக்கப்படும். இவ்வாறு அழைக்கப்பட்ட அப்பிரதேசம் பின்னர் மருவி "ரத்மலான" என்றாகியதாக சொல்லப்படுகிறது. எனினும் இப்பகுதியில் சைவமும் தமிழும் தழைத்திருந்தமைக்கு இலக்கிய, தொல்லியல் சான்றுகளுமுள்ளன. கி.பி 1415 - 1467வரை கோட்டேயைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த 6ஆம் பராக்கிரமபாகு மன்னர் காலத்தில் வணக்கத்திற்குரிய ஸ்ரீராகுலதேரர் என்னும் பௌத்த மதத்துறவியால் எழுதப்பட்ட "சலலீஹினி சந்தேச" என்ற சிங்கள இலக்கிய நூலில் இரத்மலானையில் ஆலயம் ஒன்று இருந்தமைபற்றியும் தமிழில் தோத்திரங்கள் பாடப்பட்டமை பற்றியும் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் கி.பி 1415 - 1467 காலப்பகுதியில் இரத்மலானைப் பகுதியில் இந்துத் தமிழர்கள் சிறப்போடு வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இக்கோயிற் பகுதியில் 1997யூன் 2ஆம் திகதி நிலத்தைத் தோண்டிய போது கிடைத்த பார்வதி விக்கிரகத்தை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தி அவ்விக்கிரகம் கி.பி 11, 12ஆம் நூற்றாண்டுகளுக்குரியதாக ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். அதாவது பொலநறுவை யுகத்திற்கு முற்பட்ட காலத்திலேயே அவ்வாலயமும் தமிழ்மக்களும் இரத்மலானைப் பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர் என்பது உறுதியாகிறது. இவ்வாலயம்; 1519 ஆகஸ்ட் மாதத்தில் போர்த்துகேயர் படையெடுப்பால் அழிக்கப்பட்டது. எனினும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கோயிலிருந்த இடத்தில் 1717இல் கதிர்காம முருகன் கோயிலின் நிர்வாகத்தின் கீழ் சிறிய முருகன் கோவில் ஒன்று கட்டப்பட்டது என அறியப்படுகின்றது. இன்றும் இக்கோயில் இருந்த இடத்தில் (கோணா கோவில்) சிறியளவில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. எனினும் சுமார் 7000ஏக்கர் காணிக்கு உரியதாக இருந்த அக்கோயில் இன்று வெறும் 2 ஏக்கர் காணிக்கே உரியதாக இருக்கிறது. (நன்றி என்.கே. எஸ். திருச்செல்வம்) 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் வரை இரத்மலானைப் பகுதியில் இந்துத்தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இரத்மலானை, கொழும்பு இந்துக்கல்லூரி அமைக்கப்பட்ட சூழல் அன்று இந்துச் சதுக்கம்(HINDU SQUARE)என்றே அழைக்கப்பட்டு வந்தது. இவ்வாறான இந்து தமிழ்ப்பிரதேசமாகவிருந்த தொன்மைமிக்க இடத்தில் மீண்டும் அமையும் ஆலயம் என்றவகையில் கற்பக விநாயகராலயம் முக்கியத்துவம் பெறுகின்றது.

இரத்மலானை கொழும்பு இந்துக்கல்லூரியின் அதிபராக மீண்டும் திரு. ந. மன்மதராஜன் அவர்கள் 1995 இல் பதவியேற்றத்தைத் தொடர்ந்து ஆலயமமைக்கும் பணியில் அவர் மிகுந்த ஈடுபாட்டோடு செயற்பட்டார். அதன்பயனாக ஆலயத்திருப்பணிகள் ஆரம்பமாகின. 1996ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாளில் அதாவது ஸ்ரீயுவ வருடம் தைமாதம் 21ஆம் நாள் (04-02-1996) பௌர்ணமித்திதியும் பூச நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுப நாளில் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது. இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் தலைவர் சுவாமி ஸ்ரீஆத்மகணானந்தஜி அவர்களாலும் அப்போதய கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் உயர்திரு சி.வி. விக்னேஸ்வரன் அவர்களாலும் ஆலயத்திற்கான அடிக்கற்கள் நாட்டிவைக்கப்பட்டன. நல்நெஞ்சமுள்ள புரவலர்களின் நிதியுதவியினாலும் ஆதரவினாலும் முதலில் மூலக்கோயில் (மூலஸ்தானம்) அமைக்கப்பட்டது. சிறியளவிலான அவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் பிரமாதி வருஷம் ஆனிமாதம் 17ஆம் நாள் (01 -07-1999)திருவோண நட்சத்திரமும் சித்தயோகமும் திருதியைத் திதியும் கூடிய காலை 10மணி 2நிமிடம் மதல் 11 மணி 14 நிமிடம் வரையான சுபவேளையில் நடைபெற்றது. இதுவே ஆலயத்தின் முதலாவது (நூதனப் பிரதிஷ்டா) மகாகும்பாபிஷேகம் ஆகும். பிரதிஷ்டா கலாநிதி சிவஸ்ரீ. சி. குஞ்சிதபாதக்குருக்கள் (கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான பிரதமகுருக்கள்) தலைமையிலான சிவாச்சாரியர்கள் கும்பாபிஸேகத்தைச் சிறப்பாக நடாத்தினார்கள். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேகமும் மண்டலாபிஷேகப் பூர்த்தி சங்காபிஷேகமும் சிறந்த முறையில் நடந்தேறின.

சிறியளவிலான ஆலயம் அமைக்கப்பட்ட போதிலும் கல்லூரியைச் சார்ந்தோருக்கு அது திருப்தி தருவதாக அமையவில்லை. பிரகாரக்கோயில்களைக் கொண்ட முழுமையானதொரு ஆலயமாக கற்பக விநாயகராலயத்தை விருத்திசெய்ய வேண்டும் என விரும்பினார்கள். கடுமையாக முயற்சித்தார்கள். விநாயகப்பெருமான் கருணைகூர்ந்தார். சைவாபிமானிகளும் நல்நெஞ்சம் கொண்டபுரவலர்களும் பேராதரவு நல்கினர். இவையனைத்தினதும் கூட்டு விளைவே இன்று தலைநிமிர்ந்துள்ள கற்பக விநாயகராலயம் என்பது மிகையல்ல. வேறெந்த பாடசாலைகளிலும் இல்லாத வகையில் பெரியளவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

கோயிலின் ஆதிமூலத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளியுள்ளார். "கற்பகம்" என்பது சொர்க்கலோகத்தில் இருக்கும் ஒரு மரமெனக் கூறப்படுகின்றது. இது கேட்பது எல்லாவற்றையும் கொடுக்கக்கூடியது. அவ்வகையில் கற்பக விநாயகரும் கேட்டதெல்லாவற்றையும் கொடுக்கக் கூடியவர் என்று பொருள்படுகின்றார். எனவே மாணவர்களுக்கும், அடியார்களுக்கும் கேட்டவரமெல்லாம் நல்கும் தெய்வமாக கற்பகவிநாயகர் உறைகின்றார். உட்பிரகாரத்தில் செல்வத்திருமகளாம் இலக்குமிக்கு தென்மேற்கு மூலையில் கோயிலமைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள கோயிலில் வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர் வீற்றிருக்கின்றார். வடக்குப் பிரகாரத்தில் துர்க்ககையம்மாளுக்கும் நவக்கிரகங்களுக்கும் தனித்தனியே கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மூலையில் காவற் தெய்வமான வைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். ஆலயத்தில் மூஷிக பலிபீடத்திற்கு முன்னால் தெற்குநோக்கி நடராஜர் பஞ்சகிருத்திய தாரியாய் கோயில் கொண்டுள்ளார். அடியார்கள் தம் இஷ்ட தெய்வங்களையெல்லாம் ஒருங்கே வழிபடக்மூடியதாக ஆலயம் அமைந்துள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

ஆலயத்தின் உட்புறத்தே முன்னே விநாயகரைத் தொழும் பாவனையில் சமயகுரவர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு பிரகார உட்சுவரில் விநாயகப்பெருமானின் பதினாறு திவ்ய தோற்றங்களைக் காட்டும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஆலயத்திற்கு அழகையும், புது மெருகையும் தருவது மட்டுமன்றி மாணவர்களுக்கும், அடியார்களுக்கும் ஆன்மீக அறிவையும் புது அனுபவத்தையும் ஏற்படுத்துவனவாக உள்ளன. இவ்வாறாக பலவகைகளிலும் முக்கியத்துவம் பெறும் இவ் கற்பக விநாயகர் எம்மையும், கல்லூரியையும்; நிச்சயம் மேன்மைப்படுத்துவார்.

"வேழமுகத்து விநாயகனைத்தொழ வாழ்வு மிகுத்து வரும்"

Saturday, July 31, 2010

இடிகரை வில்லீஸ்வரர் கோயில்

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் 13 கி.மீ தூரத்தில் துடியலூர் உள்ளது .அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் இடிகரை வில்லீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.கரிகால் சோழ மன்னன் தனது நாடு சிறக்கவும் புத்திர தோஷம் நீங்கவும் குறத்தி ஒருத்தியின் யோசனைப்படி 36 சிவாலயங்கள் கட்டினான்.29வது கோயிலாக வில்வ மரங்கள் நிறைந்த இந்த இடத்தில அமைத்த கோயில் இது.சிவனுக்கு வில்லீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது .பிற்காலத்தில் அம்பாளுக்கு சன்னதி அமைந்து வேதவல்லி என்று வழிபாடு செய்யபடுகிறது .


சிறப்பம்சம் : சிவலிங்கத்தின் நெற்றியில் மூன்று நேர்கோடுகள் உள்ளன .  ஆவணி 14,15,16 தேதிகளில் சூரியன் தனது கதிர்களை இந்த லிங்கத்தின் மீது பரப்பி பூஜை செய்கிறார் . இந்த கோயிலில் உள்ள நவகிரகங்கள் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் உள்ளது சிறப்பு . மேலும் இங்கு பக்தர்கள் தங்கள் குறைகளை எழுதி அர்ச்சகரிடம் சமர்பிக்கின்றனர். அவர் அதை லிங்கத்தின் முன்னால் வைக்கிறார் . அந்த குறைகள் முப்பது நாட்களில் தீர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர் .


கோயில் திறக்கும் நேரம் : காலை 8 - 10  மாலை  6-7.30
போன் : 0422 - 2396821

Friday, June 25, 2010

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை.

நயினாதீவு நயினை நாகபூசணி அம்மன் கோயில் முன் பக்கத் தோற்றம்...வட இலங்கைத் தீவுகளில் ஒன்றான நயினாதீவு வரலாற்று பழமை மிக்கதொரு இடமாகும். இந்த தீவில் நாகர்களின் ஆதிக் குடியிருப்பாலும், அங்கு இடம் பெற்ற நாக வழிபாட்டாலும், நாகங்கள் அதிகமாக அங்கு வாழ்ந்ததாலும் நாகதீவு என்றும், நயினாதீவு என்றும் பெயர் வழங்கப்பட்டது.

நாகர்கள் வாழ்ந்த காலத்திலேயே நயினாதீவில் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். ஏறத்தாள 14000 ஆண்டுகளுக்கு முன்பே நயினாதீவில் குடியேற்றம் இருந்தது என்றும். அவர்களால் ஸ்தாபிக்கப் பட்ட நாக பூசணி அம்மன் கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள நாக விக்ரகம் 14000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்றும் கட்டிட, சிற்பக்கலை பொறியியல் நிபுணரான திரு. எம். நரசிம்மன் அவர்கள் தனது நூலில் (11.03.1951) குறிப்பிட்டுள்ளார்.

நயினாதீவில் நயினை நாக பூசணி அம்மன் ஆலயமே மிக்கபெரியதும், புகழ் வாய்ந்ததும் தொன்மையானதுமாகும்.

நயினாதீவு நயினை நாகபூசணி அம்மன் கோயில் இன்னொரு பக்கத் தோற்றம்...
Sunday, June 6, 2010

அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருகோயில்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இடம் என்பார்கள் .முருக பெருமானின் கோவில் பல இடங்களில் பல சிறப்போடு அமைந்துள்ளது.அதில் கோவை மாவட்டம் காரமடை அடுத்து புங்கம்பாளையம் கிராமத்தில் குருந்தைமலையில் அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருகோயில் அமைந்துள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் வயல்வெளிகளின் நடுவில் அமைந்துள்ளது குருந்தை மலை.இக்கோயிலில் தைபூசம், வைகாசி விசாகம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப் படுகின்றது .

மலை மீது செல்லும் வழி


மலை மீது செதுக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராஜநாகலிங்கம்


தல விருட்ஷம்


மலை மீது கோயிலின் முகப்பு தோற்றம் (திருப்பணி நடந்து வருகிறது )


அருகில் சிறு குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீ அனுமன் திருகோயில்


சுற்றியுள்ள பகுதி (கோயில் மலை மீது இருந்து)
Sunday, May 30, 2010

நல்லூர் கந்த சுவாமி கோவில், இலங்கை.

நல்லூரு கந்த சுவாமி கோவில் முகப்புத் தோற்றம்இலங்கை வாழ் இந்து மக்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருக்கும் முருகன் ஆலயங்களில் ஒன்று. கதிர்காமத்திற்கு அடுத்த படியாக போற்றப்படும் ஆலயம் இது இந்த ஆலயம் முக்கியதுவம வாய்ந்தது. ஈழத்தின் மிக தொன்மையான ஆலையங்களில் ஒன்று. இங்கு இருக்கும் முருகப்பெருமானை அலங்கார கந்தன் என்று அழைப்பர்.

தேர் திருவிழா ஒன்றின் போது நல்லூர் கந்தன் தேரில் பவனி வரும் காட்சி
Sunday, May 16, 2010

அருள்மிகு பாம்பாட்டி சித்தர் குகை கோயில்.

கோவையை அடுத்துள்ள புகழ் பெற்ற மருதமலையில் அமைந்துள்ளது பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த குகை கோயில்.
தனது வாழ்வியல் காலத்தில் மருத்துவ மூலிகைகள் நிறைந்த மருதமலையில் குடிகொண்டு வெகு காலம் வழிபாடு செய்து வந்தார் .சுமார் 200 வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் பாம்பாட்டி சித்தர் இன்று நாம் வழிபாடும் குகை கோயிலில் உள்ள சுரங்கம் மூலமாக சென்று ஆதிமுலஸ்தானம் சென்று  மருதமலை முருகனை பெருமானை வழிபாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சுயம்புவாக ஸர்ப்ப வடிவத்தில் அமைந்துள்ள கற்சிலையும்
நந்திகேஸ்வரருடன் கூடிய சிவலிங்க பார்வதி சமேத பாம்பாட்டி சித்தர் எழுந்தரிளியுள்ள தெய்வீக சந்நிதியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்ய சித்தர்பெருமானின் பரிபூர்ண ஆசீர்வாதம் கிடைப்பதை உணரலாம் .
அமாவாசை பௌர்ணமி ஆகிய நாட்கள் இவருக்கு உகந்த
நாட்கள் ஆகும்.நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து
வழிபட்டு வர தோஷம் நீங்கும் .


காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம் இலங்கை...

அமை விடம் :-

காரைநகர் மேற்கு வீதியில் வாரிவளவு என்னும் பத்தியில் உள்ள குபபரை புலத்தில் 1880ம் ஆண்டு சுப்புடையார் பரம்பரையினரால் மண் கோவில் ஒன்று அமைத்து மூலவராக விநாயக பெருமானை எழுந்தருள வைத்து வழிபட்டனர்.

சுப்புடையார் பரம்பரையின் வழித்தோன்றல்களாகிய அமரர் இராமநாதர் , தம்பையா ஆலயம் சுண்ணாம்புக் கற்கள் கொண்டு புதுப்பிக்கப் பட்டது.

தம்பையா அவர்கள் அமரத்துவமடைய அவரது இளைய புதல்வர் திரு. கணேசபிள்ளை அவர்கள் 1967 ஆம் ஆண்டு வரை தனது சகோதரர் அமரர் சுப்ரமண்யம் அவர்களுடன் இணைந்து ஆலயத்தை சிறப்பாக பராமரித்து வந்தார். கணேசபிள்ளை அவர்கள் காலத்தில் தான் கோவிலில் சீமேந்து கட்டடங்கள் கட்டப்பட்டதுகுறிப்பிட தக்கது.

தமிழ் புத்தாண்டை இரதோற்சவமாகக் கொண்டு பத்துநாள் மகோற்சவமாக நடைபெறும்.

ஆலயத்தின் இருண்ட காலம்.

மேற்குறிப்பிட்ட விதமாக ஆலயம் வளர்ச்சி அடைந்து வரும் போது 1991 ஆம் ஆண்டு மகோற்சவத்திட்க்கு சில தினங்களுக்கு முன்னர் யுத்த சூழ்நிலை காரணமாக காரைநகர் மக்கள் சடுதியாக இடம் பெயர நேரிட்டது. இதனால் நித்திய நைமித்திய பூசைகள் 1997 ஆம் ஆண்டு ஆவணி மாதம் வரை நடைபெற வில்லை.

இருந்தும் வாரிவளவில் இடம்பெராராமல் இருந்த ஒரு சிலரால் கோவில் தேர் உட்பட பெறுமதியான பல பொருட்கள் பாதுகாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் ஆலயத்தின் தேர் உட்பட பல பொருட்களை பாதுகாத்தவர்கள் என்றும் போற்றப் படவேண்டியவர்கள்.

1997 ஆம் ஆண்டு ஆவணி மாதம் அந்தரித்த பிரதிஷ்டா கும்பாபிஷேகம் நடை பெற்றது அதன் பின்னர் கோவில் தொண்டுகள் சிறப்பாக முன்னெடுக்கப் பட்டன.

தற்போது ஆலயம் புதிய பொலிவுடன் மிளிர்கின்றது.


Sunday, May 2, 2010

மகாஅவதார் பாபாஜி கோயில் - பரங்கிபேட்டை

தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் இருந்து 17  கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பரங்கிபேட்டை.மரணமற்ற மஹா யோகியாக போற்றபடுபவரான பாபாஜி அவதரித்த இடம் இது என்று கூறப்படுகிறது .யோகி ராமையா என்பவரால் கட்டப்பட்ட கோயில் இது .

இங்குள்ள குறிப்புகள்  பாபாஜி கி பி 203 பிறந்ததாக சொல்கிறது.   பாபாஜி உருவம் பதித்த அபூர்வ சிலைகள் இங்கு உள்ளன.கோயிலின் பின்புறம் தியானம் செய்ய ஏற்றவாறு தியான அறை அமைக்கபட்டுள்ளது. இங்கு யோகி ராமையவின் சிலை உள்ளது .(யோகி ராமையா அவர்கள் பாபாஜி அவர்களிடம் நேரடியாக தீகசய் பெற்றவர்) .மற்றும் சுவற்றில் மிக பெரிய பாபாஜி படம் வரையப்பட்டுள்ளது.


கோயில் வளாகத்தில் தியானம் செய்ய  ஏற்றவாறு ஆலமரம் ஒன்று உள்ளது .கருவறை முன்பு பாபாஜியின் பொற்பாதங்களும் மந்திர யாக்ன பீடம் அமைக்கப்பட்டுள்ளது .கார்த்திகை மாதம் ரோகினி நட்ஷத்திரத்தில் இங்கு சிறப்பு வழிபாடுகள் இங்கு செய்யப்படுகிறது.


தியானம் செய்யும் அன்பர்களும் கிரியா பயிற்சி செய்பவர்களும் வந்து செல்ல வேண்டிய முக்கிய ஸ்தலம் இது .
                                                                                                                                                                                                          "ஓம் கிரியா பாபாஜி நம ஓம் "

Tuesday, April 20, 2010

ஸ்ரீ முன்னேஸ்வரம் ஷேத்திர (வயல்) விநாயகர் கோவில், இலங்கை..ஸ்ரீ முன்னேஸ்வரம் ஷேத்திர (வயல்) விநாயகர் கோவில் மூலவர்

முன்னேஸ்வரம் கிராமத்தில் வயல் நடுவே அமைந்துள்ள ஆலயத்தில் எழுந்தாருளி அருள் பாலிக்கிறார், பொதுவாக இவரை களத்துப் பிள்ளையார், வயற்பிள்ளையார், கேதார விநாயகர் என்று அழைக்கின்றனர்.

இந்த ஆலயத்தில் வேறு எங்கும் காணப்படாத வழிபாடுகள் இடம் பெறுகின்றன, பக்தர்கள் அனைவரும் ஆண், பெண், இந்து பௌத்தர் , தமிழ், சிங்களவர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் எந்த நேரத்திலும், தங்களுக்கு விரும்பியவாறு, விரும்பிய முறையில் அபிஷேக, பூசை, ஆராதனைகளை நடத்தலாம்.

நைவேத்தியங்களை கோவில் முற்றத்திலேயே தயார் செய்து வழிபாட்டை நடத்துகின்றனர். அத்துடன் இந்த ஆலயத்தின் கருவறைக்கு கதவுகளே கிடையாது எனவே நடை சாத்துவதே இல்லை. மதிய வேளையில் மட்டும் அர்ச்சகர் ஒருவரால் வேதாகம முறைப்படி அபிஷேக , அலங்கார பூசை புனஸ்காரங்கள் செய்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகிக்கப்படும்.

விநாயக சதுர்த்தியில் இங்கு அன்னதானம் வழங்கப்படும்.

பகவானுக்கும் பக்தனுக்கும் இடையே இடைவெளி இருக்ககூடாது என்பதற்க்காகவே அனைவரும் தாமே தமக்கு தெரிந்த அறிந்த வகையில் பூசை செய்யலாம் என்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும்.

Friday, April 16, 2010

விநாயகப்பெருமான் மனிதத் தலையுடன் உள்ள கோயில்


"சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே"

("suklaambharadharam vishnum sasivarnam chathurpujam
prasannavathanam dhyayeth sarva viknobha saanthaye
")
கொஞ்சமேனும் இறை நம்பிக்கை உடையவர்களில் பெரும்பாலோனோருக்கு இந்த சுலோகம் தெரிந்திருக்கும். குறைந்தது கேட்டாவது இருப்பார்கள். வடமொழியில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இந்த சுலோகத்தைச் சொல்லியே தொடங்குகின்றன.


இதன் விளக்கம்
**************
சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் விநாயகர் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர்
சதுர்புஜம் - நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் - தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும்.
ஆதியும் அந்தமுமான ஈசனுக்கு மூத்த பிள்ளை ,அழகன் முருகனின் அண்ணன் விநாயகபெருமானை போற்றி இந்த வலை பதிவை துவங்குகிறோம்.யானை முகத்தான் நம் குறைகளை நீக்கி நிறைபல செய்யும் கணபதிநாதன் பற்றிய ஒரு தகவல். எங்கும் யானை முகத்தோடு கானப்படும் நம் விநாயகப்பெருமான்  தமிழ் நாட்டில் சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதி நுழைவாயில் முன் சற்று தள்ளி  காணப்படும் சிறு கோவிலில் மனிதத் தலையுடன்  காட்சி தருகிறார்.இது எங்கும் காணப்படாத அரிய தரிசனம் ஆகும்.

Blog Archive

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Coupons